“இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் சென்னை பரந்தூரில் பாரம்பரியமாக வாழும் மக்களுக்கு உரிய முறையில் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்” என திமுக மக்களவைக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், புதிய கட்டமைப்பு தேவைப்பட்டதாலும் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, முக்கியமாக கருதப்படும் சாலை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னையையும் பரந்தூரையும் இணைக்கும் சாலையை முதலில் போட வேண்டும்.
அந்தச் சாலையை முதலில் போட்டாலே ஏர்போர்ட் வந்ததாக அர்த்தம். அந்த 100 அடி சாலையை போட்டால் பரந்தூரில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும்.
பாரம்பரியமாக அவர்கள் வாழ்ந்து வருவதால் இந்தப் பிரச்சினை நிலவுகிறது. அவர்களுக்கு உரிய முறையில் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.
பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் திட்ட செயல்பாட்டின் வழிமுறைகளும் முறையாக பின்பற்றி மிக விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்