பரந்தூரில், விமான நிலையம் அமைக்க 4700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்துவதால், 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாய நிலங்களைப் பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்,
அங்கு வசிக்ககூடிய மக்களின் குடியிருப்பை அகற்றாமல் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றும் விசிக தலைவர் திருமாவளவன் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க நிலங்கள் கையப்படுத்தக்கூடாது என்று மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நேற்று (ஆகஸ்ட் 25) பாமக சார்பில் இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பது ஏற்க முடியாதது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று ஏகனாபுரம் பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசவுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விமான நிலையம் அமைக்க 4700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்துவதால், 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாய நிலங்களை பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்து மக்கள் குடியிருப்பையும் பறிகொடுக்கவுள்ளனர். காலையில் அக்கிராமத்திற்கு சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளோம்.
குடியிருப்பை அகற்றாமல், நிலத்தை கையகப்படுத்த வேண்டுமென அக்கிராமத்து மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்திய அரசு மற்றும் மாநில அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
பரந்தூரில் வாழும் மக்களுக்கு உரிய முறையில் தீர்வு: டி.ஆர்.பாலு