“பரந்தூரில் விவசாயத்தை அழித்துவிட்டு கட்டடங்கள் கட்டித் தருவதை பாமக ஏற்காது” என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு அதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இதற்கு பரந்தூரைச் சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அம்மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று (ஆகஸ்டு 25) நடைபெற்றது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பாமக சார்பில் இன்று (ஆகஸ்ட் 25) காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “விமான நிலையத்துக்கு பரந்தூரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது.
வெறும் அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதனுடைய நுட்பங்கள் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.
என்ன வழியில் வரப்போகிறது, நீர்நிலைகளை என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நமக்கு வளர்ச்சி தேவை. நவீன வளர்ச்சிக்கு கட்டுமானங்கள் தேவை. ஆனால் ஒன்றை அழித்து, இன்னொன்றை உருவாக்குவது தேவை இல்லை.
அதாவது ஒரு பக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல். ஆக, இரண்டையும் சமமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒன்றை அழித்துத்தான் இன்னொன்றை கொண்டுவருவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். விவசாயத்தை அழித்துவிட்டு கட்டடங்கள் கட்டித் தருவதை பாமக ஏற்காது. அது, பாமகவின் கொள்கையும் அல்ல” என்றார்.
ஜெ.பிரகாஷ்
தமிழர்களின் உழைப்பில் செழிக்கும் என்எல்சி நிறுவனம் தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்