Paradoxes of Indian democracy

கார்ப்பரேட் நல ஆட்சியும், விவசாயிகள் போராட்டமும்: இந்திய மக்களாட்சியின் முரண்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

தலைநகர் டெல்லிக்கு வரும் சாலைகளில் எல்லாம் பெரும் தடுப்பரண்கள்; முள்வேலிகள், சாலைகளில் அணிவகுக்கும் ஆணிகள். அந்தக் காலத்தில் எதிரி படைகள் தலைநகரை நெருங்கவிடாமல் தடுப்பது போல ஏற்பாடுகள். காரணம், தலைநகரில் மறியல் செய்ய பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள் திரண்டு வருவதுதான்.

விவசாயிகள் அப்படியும் அலையலையாக வருவதால், தடுப்புகளுக்கு வெளியே முற்றுகை இடுவதால் அவர்களை கலைந்து போகச் செய்ய டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறார்கள். பெல்லட் என்னும் வெடிமருந்து இல்லாத உலோக சிறுகுண்டுகளால் சுடுகிறார்கள்; இவை உடலில் ரத்த காயங்களை ஏற்படுத்துபவை. காதுகளைத் துளைக்கும் ஒலி அலைகளை செலுத்துகிறார்கள். ஹரியானா மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்தாலும், அரசு அவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் அப்படி என்ன கோருகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஒன்றிய அரசு மூன்று விவசாயச் சட்டங்களை கொண்டுவந்தது. இந்தச் சட்டங்கள் அரசு ஆதரவு பெற்ற கூட்டுறவு கொள்முதல் மையங்களை வலுவிழக்கச் செய்து, கார்ப்பரேட் கொள்முதலை ஊக்குவிக்கும் நோக்கில் இருந்ததால் பஞ்சாப் மாநில விவசாயிகள் கிளர்ந்து எழுந்தார்கள். ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகளும் இணைந்து தலைநகரைச் சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு போராடினார்கள்.

பல மாதங்கள் குளிரிலும், வெயிலிலும் நீடித்த 2020-21 போராட்டத்தில் பல விவசாயிகள் பல்வேறு காரணங்களால் இறந்தார்கள். சர்வதேச அளவில் பெருமளவு கவனத்தை ஈர்த்தது இந்தப் போராட்டம். ஆளும் பாஜக இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சதி, காலிஸ்தான் ஆதரவாளர்களின் தூண்டுதல் என்றெல்லாம் திசை திருப்ப முயற்சி செய்தது. உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து இந்தச் சட்டங்களின் சாதக, பாதகங்களை விசாரித்து அறிக்கை அளிக்கச் சொன்னது.

இறுதியில் 2021ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வருகையில், பாஜக அரசு விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்தப் போராட்டத்தின்போது திட வடிவம் பெற்ற குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமலே இருந்தது. வெகுகாலமாக இந்திய விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கான தீர்வாக இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை (Minimum Support Price) விவசாயச் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம், பொதுவாக விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறுகிறது, இடுபொருட்களின் விலை ஏறுகிறது. ஆனால், அவர்கள் விளைவிக்கும் பொருட்களின் சந்தை மதிப்பு ஏறுவதில்லை என்னும்போது விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளாதவர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது.

பஞ்சாபில் பசுமைப் புரட்சியின் காரணமாக தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படக் கண்டவர்கள் விவசாயிகள். ஆனால், இப்போது அது கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வரும்போது அவர்கள் மற்ற மாநில விவசாயிகளைவிட தீவிரமாக போராட்டத்தில் இறங்குவது இயல்பானதாக இருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமைப் புரட்சிக்கு மட்டும் உதவவில்லை. அவர் விவசாயிகள் வாழ்க்கை மேம்பட சமர்ப்பித்த அறிக்கையில் விவசாயிகளுக்கு 50% லாபமாவது அவர்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பதால் கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்த ஆண்டு பாரத் ரத்னா விருது கொடுத்துள்ள அரசு, அவர் பரிந்துரையை நடைமுறைப்படுத்த மறுக்கிறது. விவசாயிகள் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கான அவசர சட்டத்தை அரசு உடனே பிறப்பிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் விவசாயிகளை அரசு எதிரிகளைப் போல நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.



எலெக்டரல் பாண்டும், கார்ப்பரேட் நல ஆட்சியும்…

சென்ற வாரம் நிகழ்ந்துள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு எலெக்டரல் பாண்ட் எனப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. மோடியின் பாஜக அரசு ஏழாண்டுகளுக்கு முன் ஒரு விநோதமான சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி யாரும் ஸ்டேட் பாங்கில் பணத்தைக் கட்டி எலெக்டரல் பாண்டை வாங்கலாம். பின்னர் அதை நன்கொடையாக ஓர் அரசியல் கட்சிக்குத் தரலாம். யார் கொடுத்தார்கள் என்ற பெயர் அதில் இருக்காது.

இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் தாங்கள் எலெக்டரல் பாண்ட் வாங்கியதாக கணக்கு காண்பித்தால் போதும். எந்தக் கட்சிக்குக் கொடுத்தோம் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை. அதே போல, ஓர் அரசியல் கட்சி தனக்கு எலெக்டரல் பாண்டின் மூலம் பணம் வந்தது என்று சொன்னால் போதும். யார் கொடுத்தார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் தொழில் முயற்சி பெரும் நஷ்டத்தில் முடிகிறது என்று வைத்துக்கொள்வோம். அது வங்கியில் கடன் வாங்கியுள்ளது. அது ஆளும் கட்சிக்கு ஒரு சில கோடிகள் எலெக்டரல் பாண்ட் மூலம் நன்கொடை தருகிறது. ஆளும் கட்சி தனது செல்வாக்கை பயன்படுத்தி அதன் கடனை தள்ளுபடி செய்கிறது.

இது போல நேரடியாக பணப் பரிமாற்றம் நடந்தால் ஊழல். ஆனால் மறைமுகமாக எலெக்டரல் பாண்ட் மூலம் நடந்தால் அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஸ்டேட் பாங்குக்கு மட்டும்தான் யார் பாண்ட் வாங்கியது, அதை எந்த கட்சி பணமாக்கியது என்று தெரியும். அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதால் பொதுவெளியில் விஷயம் தெரியாது. அப்படியே சொன்னாலும், கட்சி எங்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது. யாரோ கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்கள் என்று சொன்னால் அதை கேள்வி கேட்க முடியாது.

இதில் இன்னொரு பிரச்சினை ஸ்டேட் பாங்க் நிதியமைச்சகத்துக்குக் கட்டுப்பட்டது என்பதால் ஆளும் கட்சியால் யார் எதிர்க்கட்சிக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், எதிர்க்கட்சியால் யார் ஆளும் கட்சிக்குப் பணம் கொடுத்தார்கள், அதற்குப் பிரதிபலனாக ஏதாவது நன்மைகளை அடைந்தார்களா என்று கண்டுபிடிக்க முடியாது. ஊகம் செய்யலாம்; நிரூபிக்க முடியாது.
 
ஆனால், பொதுவாகப் பார்த்தால் எந்த தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு வந்த பிறகு, பாஜக கட்சிக்குத்தான் பெரும் நிதி குவிந்துள்ளது. அந்தக் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை பெருமளவு குறைத்துள்ளது. பல லட்சம் கோடிகள் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்பட்ட பெரும் சலுகைகள். அவர்கள் ஏன் பாஜக-வுக்கு தேர்தல் நிதி அள்ளித் தர மாட்டார்கள்?

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்தத் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று கண்டித்து அதை ரத்து செய்துவிட்டது. அத்துடன் கடந்த ஏழாண்டுகளில் யார், யார் பாண்டுகளை வாங்கினார்கள், எந்தெந்த கட்சிகள் அந்த பாண்டுகளை பணமாக்கின என்பதை மார்ச் 9ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டது.

Paradoxes of Indian democracy

பாஜக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளைக் குறைக்கவும், கடன் தள்ளுபடி செய்யவும் கூறும் காரணம், அவர்கள் தொழில்துறையை வளர்க்கிறார்கள், நாட்டின் நிதியாதாரங்களை பெருக்குகிறார்கள் என்பதுதான். அதே விவசாயிகள் என்று வரும்போது அவர்கள் நாட்டுக்கே சோறு போடுகிறார்களே என்று நினைப்பதில்லை. ஏனெனில் கார்ப்பரேட் முதலீடுகள் பெருகும்போது அவர்கள் அந்நிய நாடுகளிலும் முதலீடுகள் செய்கிறார்கள். நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்திக் காட்டுகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியின் உண்மை நிலை      

பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் நாட்டின் மொத்த உற்பத்தி, அதாவது ஜி.டி.பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் Gross Domestic Product அதிகரிப்பதை முக்கியமாக நினைக்கிறது, கூறுகிறது. அந்த ஜி.டி.பி-யை ஐந்து டிரில்லியன் டாலர்களாக உயர்த்துவதை தனது லட்சியமாகக் கூறுகிறது.

மேலும், உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்றும் பாஜக பெருமையடைகிறது. இது எப்படி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜி.டி.பி என்பதை மூன்று வகையாக பார்க்கலாம். அமெரிக்க டாலர்களில் எவ்வளவு என்பது நேரடியான கணக்கு.

அந்த கணக்கிலே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விலைவாசிக்கும் ஒரு பங்கினை அளித்தால் வாங்கும் சக்தியின் அடிப்படையில் அதைக் கணக்கிடுவது மற்றொரு முறை.

மூன்றாவதாக, நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒரு நபருக்கான ஜி.டி.பி விகிதம் என்ன என்று பார்ப்பது.

இந்த மூன்றையும் நாம் அட்டவணைப்படுத்தி முதல் ஐந்து நாடுகளைப் பார்ப்போம். அதாவது நேரடியாக மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டால் முதல் ஐந்து இடங்களில் வரும் நாடுகளை பட்டியலிடுவோம். அதன் வாங்கும் சக்தி அடிப்படையில் அது எந்த இடத்தில் இருக்கிறது, அதன் ஒரு நபருக்கான விகிதத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்ப்போம்.

Paradoxes of Indian democracy

இந்த அட்டவணை உணர்த்துவது முக்கியமானது. நேரடியான கணக்கீட்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா வாங்கும் சக்தி ஒப்பீட்டின்படி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதைத்தான் பாஜக அரசு பெருமையாகக் கூறுகிறது. ஆனால், மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ளும்போது, ஒரு நபருக்கான உற்பத்தி என்று கணக்கிட்டால் உலகிலுள்ள 192 நாடுகளில் 140ஆவது நாடாக இருக்கிறது. மிக, மிக கீழே இருக்கிறது.

இதன் பொருள் என்னவென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையான ஏற்றத்தாழ்வை நாட்டினுள் உருவாக்கியுள்ளது என்பதுதான்.  வளர்ச்சியின் பலன் மேல்தட்டினருக்கு அதிகமாகக் கிடைக்கிறது. வறுமை பரவலாக இருக்கிறது. இது போன்ற சமச்சீரற்ற வளர்ச்சிதான் கார்ப்பரேட் நல ஆட்சியால் உருவாக்க முடியும்.

மொத்த உற்பத்தியின் வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென்றால் விவசாயிகளும் அவர்கள் விளைபொருட்களுக்கு தக்க விலையை பெற வேண்டும். அப்போதுதான் அவர்களும் அதிகம் செலவு செய்து பிற பொருட்களை வாங்குவார்கள். அனைவருடைய வாங்கும் சக்தியும் அதிகரிக்க வேண்டுமல்லவா?

ஆனால் முதலீட்டை ஒரு புள்ளியில் திரட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்தால், பரவலான மக்கள் வறுமையில் வீழ்ந்தால் பரவாயில்லை என்று நினைத்தால் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கிருக்காது.

பாஜக தேசபக்தி சொல்லாடல், இந்து மத பெரும்பான்மைவாத அடையாளம் ஆகியவற்றின் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டி பாகிஸ்தானையும், முஸ்லிம்களையும் எதிரிகளாகக் கட்டமைத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறது.

அதனால் வளர்ச்சியைப் பரவலாக்கும் திட்டங்கள் இன்றி, அதற்கு நிதியை அள்ளித்தரும் கார்ப்பரேட் நலன்களுக்காக ஆட்சி செய்ய முனைகிறது. இந்த வாரத்து நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது இதுதான். விவசாயிகளின் போராட்டம் இந்தப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

Paradoxes of Indian democracy by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வெள்ளை குருமா

மாசக் கடைசியில பட்ஜெட்:அப்டேட் குமாரு

டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?

காங்கிரஸ் கட்சியில் இரண்டு பிரிவுகள்: பிரதமர் மோடி தாக்கு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *