முரளி சண்முகவேலனின் ‘காலனியத்தின் இன்றைய முகங்கள்’ நூலைப் பற்றிய பார்வை!
இந்தப் புத்தகம் மின்னம்பலம் இதழுக்காக முரளி சண்முகவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளின் பேசுபொருள் காலனியம் மற்றும் நவகாலனியம். இப்பேசுபொருள்கள் பொருளாதாரமாக, வரலாறாக, கலையாக, இலக்கியமாக எனப் பல வடிவங்களை எடுக்கின்றன.
முதல் கட்டுரை ராஜ குடும்பத்தில் தொடங்குகிறது. மணப்பெண் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர். அவர் கைகளில் அணிந்திருந்த வைர மோதிரம். இதைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு காலனியத்தின் பன்முகங்களை ஆங்காங்கே அலசிச் செல்கிறது. கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் எனப் பல கூறுகளை அலசுகிறார் முரளி. தமிழ் வாசகனுக்கு இத்தகைய எழுத்து புதிய உலகைக் காட்டும். உலகைக் காணும் விதத்தையும் உணர்த்தும். இதுபோன்ற முயற்சியை முரளி மின்னம்பலம் வாசகர்களுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் தொடர்ந்து அளித்துவருகிறார். அவருக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.
முரளியின் இளமைக் காலம் மதுரை காக்காத்தோப்பில் கழிந்தது. அங்கு தொடங்கிய அவரது பயணம் இன்று ஓர் உலக சஞ்சாரமாகப் பரிணமித்துள்ளது. லண்டனில் உள்ள School of Oriental and African Studies என்ற புகழ்பெற்ற ஆய்வுக்கூடத்தில் ஆய்வு மாணவராகவும் ஆசிரியராகவும் வளர்ந்துள்ளார் முரளி. மானுடவியலில் புதிய துறையாக அறியப்படும் தொலைத்தொடர்பு மானுடவியலில் சிறப்புப் பெற்றதன் வாயிலாகப் பல நாடுகளிலும் ஆலோசகர் பணியையும் ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொள்பவராக இருந்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க ஒடுக்கப்பட்டோரின் அரசியலிலும் அவர்களது வாழ்வையும் இருப்பையும் மேம்படுத்தச் செயல்படும் அணிசேர்ப்புகளில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். லண்டனில் பணிபுரியும் இவர், பவுண்டிலும் டாலரிலும் வருமானம் ஈட்டித் தனது நலனை மட்டும் உயர்த்திக்கொள்ளும் குறுகிய மனம் கொண்டவரல்ல. தனது கல்வி, புரிதல், அக்கறை ஆகிய அனைத்தும் மானுடத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாகத் தனது பெரும் பணிச்சுமைக்கு இடையே இவர் தெளிவான தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது மிகவும் பாராட்டுக்குரியது. செறிவான தமிழ் மட்டுமல்ல, அவரது அரசியல் நிலைப்பாடும் மானுடத்தின் மீதான காதலினால் ஏற்படுவதே. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மானுடக் காதலை செயல்படுத்துபவர் முரளி. “யாரு பாஸ் சாதி பார்க்கிறா இப்போ?” என்ற பம்மாத்துக்கிடையே இப்படிப்பட்ட நேர்மை.
உலகமயமாக்கலின் முரண் என்பது பண்டங்களுக்குத் தடையற்ற சுழற்சி. ஆனால், மனிதர்களுக்கு அல்ல என்பதிலிருந்து தொடங்குகிறது தற்போதைய பிரச்சினை. இப்பிரச்சினையின் பல்வேறு தாக்கங்கள் மேற்குலக அரசியலிலும் கலையிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் வெளிப்படுகின்றன. இச்சூறாவளியின் மற்றுமோர் அங்கம் நவதாராளமயக் கொள்கை. தன்னைத் தானே வழி நடத்திக்கொள்ளும் என உலகுக்கெல்லாம் பாடம் சொன்ன அதிமேதாவிகளின் கன்னத்தில் அறைந்து நிற்கிறது செம்பு அரசியல். செம்பு என்பது ஒரு பொருள் மட்டுமே. இது போன்றுதான் அனைத்துப் பொருட்களும் சேவைகளும்.
உலகமயமாக்கலினால் பொருள் உற்பத்தியில் உலகின் பல கண்ணிகள் உலகின் நாடுகளில் விரவிக் கிடக்கின்றன. ஆனால், கூடுதலான மதிப்புக் கூட்டும் கண்ணிகள் மேலைநாடுகள் வசமே இன்னமும் தொடர்கின்றன. இதன் பலனாக அடிப்படை உற்பத்திக் கண்ணிகள் பெறும் பங்கு சொற்பமே. இதற்குத் தேவை உயர் தொழில்நுட்பம். மேற்குலக நாடுகள் அதை முற்றுரிமையாக வைத்துள்ளன. அவர்களை அசைத்துப் பார்ப்பது சீனம் மட்டுமே. அதற்காக அந்நாடு பெருமுயற்சியும் செலவும் செய்துவருகிறது. அதன் முயற்சிகளை முறியடிக்க மேற்குலகம் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்தச் சூழலில் இந்தியாவில் நடக்கும் கேலிக்கூத்துக்களை என்னவென்பது. அறிவியலும் தொழில்நுட்பமும் ராமாயணத்தில் இருக்கிறது என்று அறிவியல் மாநாட்டில் பிதற்றும் பித்தர்கள் போதும் நம்மைக் கீழே தள்ளிக்குழியையும் பறிக்க. இது போதாதென்று சீரழிந்துவரும் உயர்கல்வித் துறை. இச்சூழலில்தான் முரளியின் தொகுப்பை வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போது இப்பேசுபொருள்களின் பொருத்தப்பாடு நமக்கு விளங்கும்.
இந்த அரிய பணியைத் தொடர நண்பர் முரளியை இத்தருணத்தில் வேண்டி, அவரை பாராட்டுகிறேன். லண்டனில் இருந்தபடி அவருடைய தமிழ் சமுதாயப் பணி தொடரட்டும்.
(முரளி சண்முகவேலனின் (https://mobile.twitter.com/muralisvelan) ‘காலனியத்தின் இன்றைய முகங்கள்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை)
நூல் புத்தகக் காட்சியில் மின்னம்பலம் அரங்கில் கிடைக்கும். அரங்கு எண்: 271. விலை ரூ.110.
முந்தைய பகுதி : [மின்னம்பலம் வெளியீடுகள் – 2019]
சிறப்புக் கட்டுரை: ஜனநாயக அரசுகளைத் தாக்கிய கொரோனா
வளங்குன்றா வளர்ச்சியைத் தடுக்கும் சாதிப் பாகுபாடுகள்!