இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று(மே 21) பப்புவா நியூ கினியா சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா சென்றிருந்தார். அங்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.
இதன் மூலம் பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் மோடி பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையம் வரை சென்று வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பிரதமரைக் கண்ட உடன் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
பொதுவாகச் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியா சார்பில் வரவேற்பு அளிக்கப்படாது. ஆனால், பிரதமர் மோடிக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பப்புவா நியூ கினியாவை அடைந்தேன். விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றதற்காகப் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பேவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு சிறப்பு வரவேற்பாக இது இருக்கிறது. இந்த மகத்தான தேசத்துடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்