பரந்தூர் விமான நிலையத்துக்கு மாநில அரசே தடை: அண்ணாமலை

அரசியல்

“பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் வருவதற்கு தமிழக அரசே தடையை ஏற்படுத்தி வருகிறது” என மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 30) செய்தியாளர்களிடம் பேசிய பிஜேபி தலைவர் அண்ணாமலை,

“2016 திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

இது வரவேற்கவேண்டிய விஷயம். ஒரு மாநிலத்திற்கு நிறைய விமான நிலையங்கள் வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இதுதான் நம்முடைய பிரதமர் மோடியின் கனவு. எங்கெல்லாம் பெரிய விமான நிலையங்கள் வரவில்லையோ,

அங்கெல்லாம் ’உடான் புராஜெக்ட்’டில் சிறிய விமான நிலையங்கள், அதாவது சேலம் விமான நிலையம் போன்று கொண்டுவர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.

உடான் புராஜெக்ட்டின் உந்துசக்தியாக பிரதமர் மோடி விளங்குகிறார். பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வர இருக்கிறது.

இதில் 51 சதவிகிதம் ஹோல்டிங் மத்திய அரசிடமும் 49 சதவிகிதம் ஹோல்டிங் மாநில அரசிடமும் இருக்கப்போகிறது.

2016 தேர்தல் அறிக்கையில் பரந்தூர் குறித்து திமுக சொல்லியிருந்தாலும், அதன்பின்பு ஆட்சியில் இருந்த அதிமுக, பரந்தூர் உட்பட வேறொரு இடத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், மறுபடியும் ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக தேர்வு செய்த இடத்தை விட்டுவிட்டு, மத்திய அரசுக்கு 4 இடங்களை எடுத்துச் சென்றார்கள். மத்திய அரசைப் பொறுத்தவரை பல பிரச்சினைகளைத் தாண்டி வரும்போதுதான் எதற்கும் அனுமதி தரும்.

அப்படி அனைத்து பிரச்சினைகளும் தீர்வாகும்போது, மாநில அரசு தேர்வு செய்த எந்த இடமாக இருந்தாலும், அந்த இடத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், அதற்கு எதிராய் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருக்கும் இந்த புராஜெக்ட்டுக்கு, மாநில அரசே தடையேற்படுத்தி வருகிறது.

ஆக, இதைச் சரிசெய்ய வேண்டிய கடமை திமுக அரசுக்கே உள்ளது. ஆகவே, திமுக அரசு விரைந்து இதைச் சரிசெய்ய வேண்டும். அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

காது குத்து யாருக்கு? : திமுக எம்.எல்.ஏ. மொய் விருந்து குறித்து அண்ணாமலை விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0