நீதிமன்றம் படி ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன : பண்ருட்டி ராமச்சந்திரன்

அரசியல்

நீதிமன்றம் படி ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன என்றும், இனி மக்கள் மன்றம்தான் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து இன்று (ஏப்ரல் 20) தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலின் போது தற்காலிகமாக எப்படி இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதோ, அதன்படிதான் தற்போது வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தனது கருத்துகளை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வருகிற வரை நாங்கள் இதை பதிவு செய்கிறோம் என்று முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம். எனவே, இது ஒரு பெரிய பிரச்சினையாக கருத வேண்டியதில்லை.

கர்நாடக தேர்தலில் சின்னம் பெறுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

நீதிமன்றங்கள் ஆனாலும், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் ஆனாலும் மேலெழுந்த வாரியாக முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அடிப்படை பிரச்சினைக்கு இதுவரை எந்த தீர்ப்பும் கிடைக்கவில்லை.

அடிப்படை தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதி. பொதுக்குழுவுக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று எடப்பாடி தரப்பினர் கருதுகின்றனர்.

ஆனால் பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய அதிகாரத்தில் தலையிட உரிமையில்லை என்று எம்.ஜி.ஆர் எழுதி வைத்திருக்கிறார்.
2021ல் அடிப்படை உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுத்தனர். இந்த பதவிகாலம் 2026ஆம் ஆண்டு வரை இருக்கிறது. அந்த பதவி உண்டா இல்லையா?. ஆனால் நீக்கிவிட்டதாக எடப்பாடி தரப்பில் சொல்கிறார்கள். அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

ஒருவரை நீக்க வேண்டுமானால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதுதான் நீதி. இதுகுறித்து கேட்டாலும் தீர்வு இல்லை.

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதான் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால் அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளரை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டோம். அதற்கும் தீர்வு இல்லை.

சொத்து உள்ளவர்களுக்குத் தான் வாக்குரிமை என வெள்ளைக்காரர்கள் காலத்தில் சொன்னதை போல, 10 மாவட்ட செயலாளர்கள், 10 நிர்வாகிகள் சேர்ந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க முடியும் என்று திருத்தியிருக்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது.

நீதிமன்றங்களில் நெடிய நெடிய படிக்கட்டுகளில் ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன. அதனால் தான் மக்கள் மன்றத்தை நோக்கி 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம்.

அடிப்படை உறுப்பினர்களுக்கு சம்பந்தமே இல்லாத நிர்வாகிகள் ஒரு கட்சியை நடத்த முற்பட முடியுமா. ஒரு கட்சியின் எதிர்காலம் மக்களின் ஆதரவை பொறுத்தது. ஈரோடு இடைத்தேர்தலிலேயே பார்த்துவிட்டோம், இக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று.

மக்கள் ஆதரவு இல்லாமல் ஒரு கட்சியை கொண்டு போக முடியுமா?. மக்களுக்கும் சம்பந்தமில்லாமல், தொண்டர்களுக்கும் சம்பந்தமில்லாமல், இரண்டாயிரம், மூன்றாயிரம் பேரை சேர்த்துக் கொண்டு நாங்கள்தான் கட்சி என்று சொல்கிறார்கள்.

எனவே நியாயத்தை மக்களிடம் எடுத்து சொல்லி, மக்களின் தீர்ப்பை பெற வேண்டும் என்பதற்காகத்தான் திருச்சியில் மாநாடு நடத்த இருக்கிறோம்.

டிடிவி தினகரனை பொறுத்தவரை அவர் ஏற்கனவே ஒரு கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரை அழைத்தால் தோழமை கட்சிகளையும் அழைக்க வேண்டியிருக்கும். எனவே அதற்கு வாய்ப்பு இல்லை.

சசிகலாவை பொறுத்தவரை எல்லோரையும் ஒன்று சேர்த்துவிடலாம் என நம்புகிறார். அவரை அழைத்து சசிகலா வரும்பட்சத்தில் அது நடுநிலையை தவறுவதுபோல் ஆகிவிடும்.

நாங்கள் அழைத்து அவர் வரவில்லை என்றால் எங்கள் வேண்டுகோளை நிராகரித்ததுபோல் ஆகிவிடும். அது அவருக்கு தர்ம சங்கடம். இந்த சூழ்நிலையில் எதுவும் வேண்டாம் என இருக்கிறோம்.

அவர் எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம். ஓபிஎஸ் தரப்பு கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று ஈபிஎஸ் தரப்பு சொல்வதற்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தை நம்புவோம். அதே நேரத்தில் எது நடந்தாலும் நம்மை தயார் படுத்திக்கொள்வோம்.

உச்ச நீதிமன்றத்தில் எல்லாம் கேட்டார்கள். கேட்ட பிறகு தேர்தலுக்கு பிறகுதான் தீர்ப்பு வழங்குவோம் என முடித்தார்கள். திடீரென்று தேர்தலுக்கு முன்னதாக இரட்டை இலை சின்னம் பழனிசாமிக்குத்தான் என்று கிடுகிடுவென ஒரு தீர்ப்பு வழங்கினார்கள்.

தேர்தல் ஆணையத்தை அழைத்து நாங்கள் எந்த தடையும் விதிக்காத போது நீங்கள் ஏன் இரட்டை இலை சின்னத்தை வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு நீங்கள் சொன்னால் வழங்குகிறோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அப்படியே அவர்களுக்கு வழங்கிவிட்டார்கள். யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என தெரியவில்லை.

கர்நாடக தேர்தலில் சூழ்நிலையை பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும். என்னை பொறுத்தவரை திமுகவுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. அவர்கள் வலுவாக இருக்கிறார்கள்.

பாஜக ஆதரவு இல்லை என்றால், வட இந்தியர்கள் 16 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்றால் ஈரோடு கிழக்கில் அதிமுக டெபாசிட்டை இழந்திருக்கும்.

தமிழ்நாட்டு மக்களை போல் அறிவாளிகள் யாரும் இல்லை. 67 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர்-ஐ தான் ஆதரித்தார்கள்.

ஜெயலலிதாவுக்கும் ஜானகிக்கும் இடையே போட்டி வந்தபோது ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் ஜானகி பக்கம் இருந்தார்கள்.

அதிமுக படகு மூழ்கப்போகிறது. இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது” என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பிரியா

இளையராஜாவுடன் இணையும் பிரேமம் பட இயக்குநர்!

டிஜிட்டல் திண்ணை: புயலைக் கிளப்பும் ’பிடிஆர்’ குரல்… ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

Panrutti Ramachandran against eps
+1
2
+1
0
+1
1
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *