எம்ஜிஆருக்கு உதவியதை போல ஓபிஎஸ்க்கும் உதவுவேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று (ஏப்ரல் 24) திருச்சியில் முப்பெரும் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியபோது, “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடு. 1956-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அதில் நான் கலந்து கொண்டேன். 67 ஆண்டுகள் கழித்து 86 வயது இளைஞனான நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓபிஎஸ் அவர்களை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார். மண்டியிட்டு காலில் விழுந்து பதவி பெற்று காலை வாரி விடுகிறவரா நம்பிக்கைக்குரியவர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு மக்களின் நம்பிக்கைக்குரியவர் ஓபிஎஸ் தான் என்பது நிரூபணமாகியுள்ளது. எதிர்காலம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தான்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சாவு மணி அடிப்பதற்காக தான் நீங்கள் இங்கே கூடியுள்ளீர்கள். எம்ஜிஆரோடு கடைசி வரை உடன் இருந்தேன். இன்றைக்கு ஓ.பன்னீர் செல்வத்துடன் இருக்கிறேன். புரட்சி தலைவர் எம்ஜிஆர் முகங்களை ஓ.பன்னீர் செல்வம் முகத்தில் பார்க்கிறேன். அவருக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தேனோ அதேபோல ஓ.பன்னீர் செல்வத்திற்கும் உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்