பஞ்சமி நிலத்தை வாங்கிய பன்னீர் செல்வம்… எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Selvam

தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாங்கியது பஞ்சமி நிலம் என்பது உறுதியானதால், அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ராஜகளம் என்ற பகுதியில் மூக்கன் என்பவருக்கு 40 சென்ட் பஞ்சமி நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தநிலையில், அந்த பஞ்சமி நிலத்தை 2008-ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சாராத ஹரிசங்கர் என்பவருக்கு மூக்கன் எழுதிக்கொடுத்துள்ளார். பின்னர், அந்த நிலத்தை ஹரிசங்கரிடம் இருந்து வாங்கிய ஓ.பன்னீர் செல்வம், தன்னுடைய பெயரில் பட்டாவை மாற்றியுள்ளார்.

பஞ்சமி நில சட்டத்தின்படி, அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் பட்டியலினத்தவர் 15 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது. 15 ஆண்டுகளுக்கு பிறகும், பட்டியலினத்தவர்களுக்கு மட்டுமே நிலத்தை விற்பனை செய்ய முடியும்.

இந்தநிலையில், பஞ்சமி நில சட்டத்தை மீறி ஓ.பன்னீர் செல்வம் பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூக்கனின் மகன்கள் மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், பன்னீர் செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பஞ்சமி நிலத்திற்கு பட்டா பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. panneerselvam purchased land scs

இதனையடுத்து, “பஞ்சமி நிலத்திற்கு பன்னீர் செல்வம் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். பன்னீர் செல்வம் பெயருக்கு பட்டாவை மாற்றிக் கொடுத்த தாசில்தார், எஸ்.சி.,எஸ்.டி., நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த நிலத்தையும் தாய் பத்திரத்தை வாங்கி முழுமையாக பரிசோதித்த பின்னரே பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பஞ்சமி நிலங்களை முறையற்ற முறையில் பட்டா மாற்றம் செய்ய வரும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பத்திரப் பதிவாளர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. panneerselvam purchased land scs

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share