ஓபிஎஸ் என்ற பிரச்சினை இன்றோடு முடிந்துவிட்டது: நத்தம் விசுவநாதன்

Published On:

| By Guru Krishna Hari

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இன்று (ஜூலை 11) பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்,  “ஓபிஎஸ் சின் ஒரு முகம்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவரது இன்னொரு முகம் மிகக் கொடூரமான முகம். அவரது பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அவரோடு நெருங்கிப் பழகிய எனக்கு நன்றாகத் தெரியும். அவர் யாரையும் நம்ப மாட்டார். தன்னையும் நம்ப மாட்டார்.

தேனியில் தங்க தமிழ் செல்வனை தேர்தலில் தோற்கடித்தற்காக ஓ.பன்னீரை,  ‘ச்சீ போ… துரோகி. என் முகத்திலேயே முழிக்காதே’  என்று கடுமையாக திட்டினார் ஜெயலலிதா.  அதை நானே நேரடியாக கேட்டிருக்கிறேன். நானும் திட்டு வாங்கியிருக்கிறேன். இல்லையென்று சொல்லவில்லை. அதற்குக் காரணமும் அவர்தான். 

அம்மா இல்லையென்று இப்போது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். அம்மாவின் தலைமுடியை சட்டமன்றத்தில் இழுத்த துரைமுருகனை இந்திரன் சந்திரன் என்று சட்டமன்றத்தில் பாராட்டுகிறார் பன்னீர்செல்வம். ஆனால் துரைமுருகனை பாராட்டிக் கொண்டுவரப்பட்ட  அந்த தீர்மானத்தில் எடப்பாடி பேசவில்லை. அம்மாவின் ஆன்மா பன்னீரை மன்னிக்குமா?  தீய சக்தி என்று நமது தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியை வானளாவ புகழ்கிறார். பராசக்தி வசனத்தை மனப்பாடமாக சொல்கிறார்,தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியை பாராட்டினால் எம்.ஜி.ஆரின் ஆன்மா அவரை மன்னிக்குமா?எம்.ஜி.ஆருக்கும் அம்மாவுக்கும் துரோகம் செய்ததால்தான்  அவர் அரசியல் அனாதையாக அலைந்துகொண்டிருக்கிறார். அவரது வீழ்ச்சிக்கு அவரது நடவடிக்கைதான் காரணம். தன்னை வளர்த்து  ஆளாக்கிய இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்யலாமா? எப்போதும் எதிரிகளை கூட மன்னித்துவிடலாம். ஆனால் துரோகியை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.  இப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தடைக் கல்லாக இருந்த ஓபிஎஸ் நீக்கப்பட்டிருக்கிறார்.

ஓபிஎஸ் என்ற பிரச்சினை இன்றோடு முடிந்துவிட்டது. இனிமேல் நமது அரசியல் எதிரியான திமுகவை வேரோடு வீழ்த்துவதற்கான வேலைகளில் இறங்குவோம். மக்களிடம் திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம். நமது அருமை அண்ணன் எடப்பாடியாரை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வரை ஓயக் கூடாது” என்று நத்தம் விசுவநாதன் பேசிக் கொண்டிருக்கும்போதே…

“ஓ.பன்னீரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என்று பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே குரலாக  உரத்து கோஷம் எழுப்பினார்கள்.“ஆக எதிரியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் துரோகியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறீர்கள். உங்கள் ஏகோபித்த உணர்வுக்கு நன்றி. உங்கள் உணர்வுகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புங்கள்” என்று பேசினார் நத்தம் விசுவநாதன்.

குறுக்கிட்ட கே.பி.முனுசாமி,   “உங்கள் உணர்வுகள் ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகள். இதற்காக நிச்சயம் நமது பொதுச் செயலாளர் தீர்மானம் கொண்டுவருவார்” என்று  பேசினார். ஆக இந்த பொதுக்குழுவிலேயே  ஓ.பன்னீர்செல்வத்தை  அதிமுகவில் நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. 

வேந்தன்