“முதல்வர் ஸ்டாலினுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகி விடுகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.
சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (அக்டோபர் 19) எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால், பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் தடையை மீறி, கறுப்பு நிற சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி, ”அதிமுகவை எதிர்கொள்ள, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இல்லை. பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி, கட்சியை உடைக்கப் பார்க்கிறார்.
சட்டசபையில், ஸ்டாலினும் பன்னீர்செல்வமும் அரைமணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர்.
கட்சியை உடைக்க சதி நடக்கிறது; இது ஒருபோதும் நடக்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 20) சென்னை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், ”நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டம் உங்களை எதிர்த்து நடத்தப்பட்டதா” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ”அது, என்னை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக நான் கருதவில்லை” என்றவரிடம், ”நீங்களும் முதல்வர் ஸ்டாலினும் அரைமணி நேரம் தனி அறையில் பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாரே” என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், ”அப்படி நான் பேசியதாக பழனிசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டே நான் விலகுகிறேன். பழனிசாமியால் இதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலகுவாரா” எனச் சவால் விட்டார்.
ஜெ.பிரகாஷ்
அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!
கார்கே: அக்டோபர் 26 பதவியேற்பு!