குஜராத் சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று(டிசம்பர் 12) உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதிமுக தற்போது இரு அணிகளாக உள்ளநிலையில், யார் தலைவர் என்ற போட்டாபோட்டி நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கும் நடந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடந்த ஜி20 மாநாட்டுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வந்த அழைப்பு கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதைக் குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே பாஜக தலைமையிடம் இருந்து கடிதம் வந்தது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. மாறாக வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பினார்.
அதேசமயத்தில், ஓ.பன்னீர் செல்வம் நேரில்சென்று கலந்துகொண்டார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யும் சென்றார்.
இந்த பதவிஏற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை ஓபிஎஸ் 2,3நிமிடம் சந்தித்து பேசி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, புதிய நீதிகட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதுபோன்று குஜராத்தில் உள்ள லீலாபேலஸ் ஹோட்டலில் ஓபிஎஸ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா 15 நிமிடம் சந்தித்துப் பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பன்னீர்செல்வத்தைப் பார்த்து பிரதமர் மோடி கை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!
ராகிங் கொடுமை: மாறுவேடத்தில் சென்ற போலீஸ்..சிக்கிய மாணவர்கள்!
அம்மாவின் விசுவாசி தன்னை கூறிக்கொள்ளும் ஒபிஸ், ஜெ ஜெ எப்படி பிஜேபி யை எதிர்த்தார் என்பதை தமிழக மக்கள் மறந்துட மாட்டார்கள். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா… இந்த இரண்டு அடிமைகளால் admk அழிந்து போகிறது.