டிஜிட்டல் திண்ணை: பன்னீர் அணி- பாஜக கூட்டணி… எடப்பாடிக்கு வந்த டெல்லி மெசேஜ்!

அரசியல்

வைஃபை  ஆன் செய்ததும் அதிமுக உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.   வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது

அதிமுகவின்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 9 ஆம் தேதி நடந்தபோது அதில் முக்கிய சப்ஜெக்டாக விவாதிக்கப்பட்டது  பொதுச் செயலாளர் தேர்தல். 2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து  தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதன் முதல் கட்டமாக அதிமுக உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. சென்னையில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் உறுப்பினர் அட்டைகள் மொத்தமாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒன்றிய செயலாளர்கள் மூலமாக ஒவ்வொரு கிளை வரை கொண்டு செல்லும் வேலைகள் அதிமுகவில் இப்போது வேகமாக நடந்து வருகின்றன.  முன்னதாக அதிமுக உறுப்பினர் அட்டையில் எம்ஜிஆர் ஜெயலலிதா  படங்களோடு  ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்று அவர்கள் கையெழுத்தும் இருக்கும். ஆனால் இப்போது அச்சடிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் அட்டையில்  எம்.ஜிஆர், ஜெயலலிதா படங்களோடு எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த உறுப்பினர் அட்டைகளை விநியோகிக்கும்போது அதற்கான கூட்டத்தை நடத்தி மினிட்ஸ் புக்கில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு கிளைக்கும் எத்தனை உறுப்பினர் அட்டை பெறப்பட்டது என்ற கணக்குகளையும், உறுப்பினர்களின் விவரங்களையும் அந்த மினிட் புக்கில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு எல்லாம் இந்த அட்டை கொடுக்கப்படவில்லை.  மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கியமான நிர்வாகிகள் இவர்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு மட்டுமே இந்த உறுப்பினர் அட்டை விநியோகிக்கப்படுகிறது. அட்டையின் விலையை வழக்கம் போல மாவட்ட செயலாளர்களே தலைமை கழகத்தில் செலுத்தி உறுப்பினர் அட்டைகளை பெற்றுச் சென்றுள்ளனர். பொதுச் செயலாளர் தேர்தல் நடந்ததும் அதன் பிறகு அனைவருக்கும் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படும் என்று இப்போது புதிதாக கார்டு கேட்பவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே… பன்னீரின் சட்டப் போராட்டமும் தொடர்கிறது. 2022 ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  பொதுக்குழு செல்லும் என்று சொன்ன உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவின் தீர்மானங்களை ஆராயவில்லை என்றும் அந்தத் தீர்மானங்கள் தங்களை பாதிப்பதாக கருதுபவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படியே  2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார். அவரோடு வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

இப்படி ஒரு பக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி முடித்து தனது தலைமையில் தான் அதிமுக என்பதை அதிகாரபூர்வமாக நிலைநாட்ட உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

உறுப்பினர் அட்டைகள் விநியோகம் முடிந்தவுடன் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.  அதேநேரம் ஜூலை 11 பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகளில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது, ‌‌அதாவது பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடுபவர் பத்து வருடம் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், 5 வருடம் தலைமைக் கழக பதவியில் இருந்திருக்க வேண்டும்,  10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று ஒரு நிபந்தனை கட்டமைக்கப்பட்டது. இது எம்ஜிஆர் வகுத்த அதிமுக சட்ட விதிகளுக்கு எதிரானது என்று  பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு முன் பொதுக்குழுவை கூட்டி இந்த நிபந்தனைகளை நீக்க திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தனக்கு எதிராக யாரும் போட்டியிடக் கூடாது என்று எடப்பாடி சதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் இந்த நிபந்தனைகளை நீக்க திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மேலும்  இப்போதைய நிலையில் தனக்கு போட்டியாக யாரும் இல்லை என்ற நிலையில் இந்த விதிமுறைகளை நீக்க துணிந்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் அவரது தரப்பினர்.

எடப்பாடியின் நம்பிக்கைக்கு இன்னும் சில சந்திப்புகளும் காரணம். மார்ச் 15 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,  அதிமுக எம்பி தம்பிதுரை ஆகியோர் தனித்தனியே சந்தித்துப் பேசினார்கள். நாடாளுமன்றம் முடங்கிக் கொண்டிருந்த நிலையில் நடந்த இந்த திட்டமிடப்படாத சந்திப்பின் போது தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் பலத்தையும் அதிமுக கூட்டணியின் பலத்தையும் வாசன், தம்பிதுரை இருவருமே பிரதமரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதிமுக-பாஜக கூட்டணி தொடர வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் பிரதமரிடம் கிடைத்த சில நிமிடங்களில் கூறியுள்ளார்கள். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு வாசனும், தம்பிதுரையும் எடப்பாடியிடம் சொன்ன தகவல்கள் அவரது உற்சாகத்தை மேலும்  கூட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இதன் அடிப்படையிலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை வேகப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் பெயரில் புதிய கேலரி

சட்டை பட்டனை கழட்டிவிட்டு சல்யூட்: உதயநிதியை தாக்கும் ஜெயக்குமார்

+1
1
+1
2
+1
1
+1
2
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *