இடைக்கால பொதுச்செயலாளர் வார்த்தைக்கே இடமில்லை: பன்னீர் வழக்கறிஞர்கள்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்துள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள், “நீதிபதி எங்களுடைய வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை. இது செல்லும். 23.6.2022க்கு முன்பு இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது கழகத்தின் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. அம்மாவின் ஆசியுடன் கிடைத்த வெற்றி.

கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் பொறுப்பு உள்ளது என்பதற்கு இந்த தீர்ப்பு வலு சேர்த்துள்ளது.

தீர்ப்பு விவரத்தின் படி, 11.7.2022 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.

இன்றைய தினம் வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் செயல்பாட்டில் உள்ளது. எந்தவிதமான திருத்தங்களும் ஜூன் 23அன்று ஒப்புதலுக்கு வைக்கப்படவும் இல்லை, அது நிராகரிக்கப்படவும் இல்லை.

எந்த கூட்டமாக இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் கூட்ட வேண்டும் என்பது தான் எங்கள் தரப்பு வாதம்.

இதை நீதிபதி முழுமையாக ஏற்றுகொண்டு தீர்ப்பு வழங்கினார். தேர்தல் ஆணையத்தின் பதிவேட்டிலும் இப்படிதான் உள்ளது.

5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மனு கொடுக்கும் பட்சத்தில் இருவரும் கலந்து ஆலோசித்து பொதுக்குழுவை நடத்தலாம்.

அப்படி நடத்துவதற்கு ஏதேனும் பிரச்சினை வரும் என்று நினைத்தால் அவர்கள் இந்த நீதிமன்றத்தை அணுகி ஒரு ஆணையரை நியமிக்க அதிகாரம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழுமையான தீர்ப்பைப் பன்னீர் படித்துப் பார்த்த பிறகு அவர் இதுகுறித்து கருத்து தெரிவிப்பார். இந்த தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு உட்பட்டதா என்பது குறித்து தற்போது சொல்ல இயலாது.

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பது பெரியதா, இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருப்பது பெரியதா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “இடைக்கால பொதுச் செயலாளர் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஈபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவி இருக்கும் நிலையில், அதுதொடர்பான வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் வழங்கிய உத்தரவு குறித்து இப்போதைக்கு எந்தவிதமான மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இல்லை” என்றனர்.
பிரியா

எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.