அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரி இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டல மேலாளருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் மாறி மாறி சபாநாயகருக்குக் கடிதம் எழுதுவது, வங்கிகளுக்குக் கடிதம் எழுதுவதுமாக இருந்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் எம்.பி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் அதிமுக உறுப்பினர் இல்லை. இனிவரும் காலங்களில் அதிமுக உறுப்பினர் என்று அவை நடவடிக்கைகளில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஓம்.பிர்லாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதிய ஓ.பன்னீர் செல்வம், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது. இதனால் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டேன்.
அவர்கள் கூட்டக்கூடிய நிகழ்வுகள் மற்றும் கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்தச்சூழலில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கியுள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின் படி நடைபெறவில்லை. எனவே என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எவற்றையும் நடைமுறைப் படுத்த வேண்டாம். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 23) ரிசர்வ் வங்கி சென்னை மண்டல மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் பன்னீர் செல்வம்.
அதில், நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ளேன். கரூர் வைஸ்யா வங்கி, எஸ்பிஐ, இந்தியன் வங்கிகளில் உள்ள கணக்குகளை நான் தான் கவனித்து வந்தேன்.
இந்நிலையில் சட்டவிரோதமாகப் பொதுக்குழுவைக் கூட்டி பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது சட்டவிரோதமானது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை நான்தான் அதிமுக பொருளாளர். எனவே மேற்குறிப்பிட்டுள்ள வங்கிகளில் உள்ள 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியா