“சசிகலாவின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தவர் பன்னீர்” என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று (அக்டோபர் 28) இரவு, அதிமுக 51ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தன்னுடைய அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அதில், ஜெயலலிதாவை முழுவதுமாக சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எந்த மருத்துவச் சிகிச்சை செய்தாலும் தாம் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று சசி சொன்னதாக அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வருகிறதென்றால், சசிகலாவின் உறவினரான மருத்துவர் சிவக்குமார்தான் பார்த்திருக்கிறார். ஆனால், அப்பல்லோவிற்கு ஜெயலலிதா வந்தபிறகு, பல்வேறு நோய்ப் பிரச்சினைகள் சொல்லப்பட்டன.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர், ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு ’அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது.
அதற்கு ஆஞ்சியோ செய்துவிடலாம். தான் தயாராய் இருக்கிறேன்’ என்கிறார், பணியில் இருந்த மருத்துவர் சசிகலாவை சந்தித்த பிறகு, ’அதை வேண்டாம்’ என்கிறார்.
அதை ஓர் அரசாங்கம் சொல்லியிருக்க வேண்டும். அப்போது பொறுப்பு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அந்த நடவடிக்கையை அவர் கையில் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயலலிதா வைத்திருந்த பதவியை பன்னீர்செல்வம் வைத்திருக்கிறார்.
அவர், ஏற்கெனவே இரண்டு முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஆசியால் அவர் அவ்வளவு பெரிய பதவியைப் பெற்றிருக்கிறார்.
ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது, இறைவன் அவருக்கு தொண்டு செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தாமல் மெளனியாக இருந்தார். அப்போது, ஜெயலலிதா உடல்நலக் குறைவுடன் இருக்கிறார். ஆட்டிப் படைக்கக் கூடிய சசிகலா நல்ல நிலையில் இருக்கிறார்.
ஜெயலலிதா தேவையா, ஆட்டிப் படைக்கக் கூடிய சசிகலா தேவையா என்கிற நிலை வருகிறபோது சசிகலாவின் பேச்சைக் கேட்டு பன்னீர் அமைதியாக இருந்துவிடுகிறார்.
அதனால், அங்கே தர்மம் செத்துவிடுகிறது. தர்மம் மட்டும் சாகவில்லை; ஜெயலலிதாவும் மறைந்துவிடுகிறார். அதற்குக் காரணகர்த்தாவே சசிகலாதான் என்று நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையில் தெளிவாக எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் சகோதரி என்று 33 ஆண்டுகள் சொல்லிக்கொண்டு இவ்வளவு பெரிய துரோகி, எத்தனை கல்நெஞ்சம் உடையவராக இருந்திருக்கிறார், பாருங்கள்.
ஜெயலலிதா இருந்தவரை அவருடைய புகழை தன்னுடைய ஆதாயமாக எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவை முன்னிறுத்தி சசிகலாவின் குடும்பம் பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து உள்ளது. அவர்களிடம் அன்று ஒன்றுமே இல்லை. வெறும் வீடியோ கடை மட்டும் வைத்திருந்தார்கள்.
வீடியோ கடை வைத்திருந்தவர்கள் இன்று ரூபாய் 50 ஆயிரம் கோடி சம்பாதிக்க முடியுமா? ” என்று கேள்வி எழுப்பினார்.
ஜெ.பிரகாஷ்
ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்
கிராம சபை போல் இனி நகர சபை கூட்டங்கள்!