தமிழ்நாட்டுக்கு நவம்பர் 11 இல் பிரதமர் மோடி, நவம்பர் 12 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா என இரு முக்கிய தலைவர்கள் வந்து சென்றனர். இந்த இருவரையும் சந்திப்பதற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடுமையாக முயற்சித்தனர். ஆனால் தனிப்பட்ட சந்திப்புகள் இவர்கள் இருவருக்கும் வாய்க்கவில்லை.
அண்மையில் டெல்லி சென்று மோடியை சந்தித்துப் பேச முடியாமல் திரும்பிய எடப்பாடி பழனிசாமி பிறகு அமித் ஷாவை கடும் முயற்சிக்குப் பிறகு சந்தித்தார். அமித் ஷாவுடனான இந்த சந்திப்பையே மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் ஜெயின் என்பவர்தான் ஏற்பாடு செய்தார்.
இந்த பின்னணியில் தமிழகம் வந்த மோடி, அமித் ஷா ஆகிய மத்திய இரட்டையர்களை எப்படியாவது சந்தித்து பேசிவிடவேண்டும் என்று அதிமுகவின் மாநில இரட்டையர்களான எடப்பாடியும், பன்னீரும் கடுமையாக முயற்சித்தனர். ஆனால் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வரவேற்கவும், வழியனுப்பவும் மட்டுமே எடப்பாடியும், பன்னீரும் அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச அவர்களுக்கு நேரம் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து தனது முயற்சியை சற்றும் தளரவிடாத ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து பிரதமர் புறப்பட்ட உடனேயே தானும் சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி அமித் ஷா கலந்துகொண்ட இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவுக்கு ஓ.பன்னீரும் சென்றார். அங்கே முதல்வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வரவேற்புரையிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை சொல்லி வரவேற்றார் சீனிவாசனின் மகள் ரூபா.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன விழாவுக்கான அழைப்பிதழ் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.
இந்த பின்னணியில் கலைவாணர் அரங்கத்துக்கு வந்த அமித் ஷாவை முதல்வரிசையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் விழா முடிவில் சென்று சந்தித்து வணக்கம் தெரிவிக்க… பன்னீருக்கு அமித் ஷா கை குலுக்கினார். இந்த போட்டோவை வைத்துக் கொண்டு அமித் ஷாவை பன்னீர் சந்தித்தார் என்றும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் தான் கலைவாணர் அரங்கத்துக்கு வர இயலாத சூழலை தெரிவிக்க அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எடப்பாடியிடம் பேசிய அமித் ஷா, ‘நாம டெல்லியில சந்திக்கும்போதே உங்கக்கிட்ட சொன்னேன். எல்லாரும் ஒற்றுமையா இருந்தாதான் தேர்தலை எதிர்கொள்ள முடியும். இப்பவும் அதேதான் சொல்றேன். எல்லாரும் ஒற்றுமையா இருக்குறதுதான் உங்க கட்சிக்கும் நல்லது’ என்று எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் எடப்பாடியோ தனது ஆதரவாளர்களிடம், ‘பன்னீரை நாம் தொடர்ந்து எதிர்ப்போம். இதில் எந்த வித பின்வாங்குதலும் கிடையாது. தொடர்ந்து பன்னீரை கடுமையாக தாக்குங்கள்’ என்று கூறியுள்ளார்.
அமித் ஷாவின் சென்னை வருகை பன்னீருக்கு உற்சாகத்தையும், எடப்பாடிக்கு மேலும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
–வேந்தன்
டி20: இங்கிலாந்தின் இளம்புயல் சாம் கரன் வென்ற இரு பட்டங்கள்!
இரவின் நிழல்: அமேசான் பதிவும், பார்த்திபன் விளக்கமும்!