சர்வாதிகாரத்தின் உச்சநிலை : எடப்பாடிக்கு பன்னீர் கண்டனம்!

அரசியல்

“தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை” என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 14) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்ற திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளரான சிவநாராயணசாமி, தன்னை ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம், “அதிமுக சட்டவிதிகளுக்குப் புறம்பாக, ஜூன் 23, ஜூலை 11 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற பொதுக்குழு, எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்கிற கும்பலால் நடத்தப்பட்டது.
இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவுக்கு வலிமை சேர்க்க வந்திருக்கிறார் சிவநாராயணசாமி. இதுபோல இன்னும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீரை சந்தித்து ஆதரவு தர இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சூழ்ச்சி செய்கிறார். அவர்களுக்கு எங்களை நீக்க எந்த அதிகாரமும் இல்லை. எந்த உரிமையும் இல்லை. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறோம். அவர்களும் விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர்கள் எது செய்தாலும் எங்களைக் கட்டுப்படுத்தாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டவிதிகளுக்கு புறம்பாக அவர்கள் நடக்கிறார்கள். அது என்றைக்கும் செல்லாது. ஓபிஎஸ் இருப்பதுதான் உண்மையான அதிமுக. ‘நீங்கள் வெளியே செல்லுங்கள். சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்போகிறோம்’ என ஜூலை 11ம் தேதி, ஆர்டிஓ எங்களிடம்தான் கூறினார்கள். அன்று எங்களிடம்தான் பொறுப்பு இருந்தது. அதனால் அதிமுக அலுவலகத்தை எங்களிடம்தான் கொடுக்க வேண்டும்” என்றார்.

பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 38 இடங்களில் போட்டியிட்டு, ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணு என தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிபெற்றார். அவரை நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இது, எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் கழகச் சட்டப்படி செல்லாது. முறைப்படி கழகச் சட்டவிதிகளுக்குப் புறம்பாக எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டதைத் தினந்தோறும் தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகாராகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் உள்பட, அவரது ஆதரவாளர்கள் 18 பேரை, நேற்று (ஜூலை 14) கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதைத் தொடர்ந்து, பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவாளர்கள் 22 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதிராஜாராம், தி.நகர் பி.சத்யா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன். சி.வி.சண்முகம், ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர்.

-ஜெ.பிரகாஷ்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *