பாலஸ்தீன மக்கள் தெற்கு காசா பகுதி நோக்கி இடம் பெயர்ந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் இன்று (அக்டோபர் 14) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு போராளிகள் அமைப்பான ஹமாஸ் அக்டோபர் 8-ஆம் தேதி தாக்குதலை தொடர்ந்தது. உடனடியாக பாலஸ்தீனம் மீது போர் தொடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா நகரமானது உருக்குலைந்து போயுள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு மக்கள் அல்லல்படுகிறார்கள். இருப்பினும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் இதுவரை 3200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தசூழலில் தான் வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பாலஸ்தீனியர்கள் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறி தெற்கு காசாவிற்கு இடம்பெயர வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்தது. இன்று அதிகாலை 5 மணியுடன் இஸ்ரேல் விதித்த கெடு நிறைவடைந்தது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் கூறும்போது, “வடக்கு காசா பகுதியில் வசித்த பாலஸ்தீன மக்கள் தெற்கு பகுதி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். காசா பகுதியை சுற்றி இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர். காசா பகுதியின் நாலாபுறமும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போரின் இறுதி நிலை என்னவென்றால் ஹமாஸ் மற்றும் அதன் ராணுவத்தை தகர்த்தெறிவது தான். இதனால் ஹமாஸ் ஒருபோதும் இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது படையினருக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு “உடம்பில் இறுதி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிராக போராடுவோம். காசா பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டாம்” என்று வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நின்றுகொண்டிருந்த முகமது, “காசாவிலிருந்து வெளியேறுவதை விட மரணம் சிறந்தது” என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் “உங்கள் வீடுகளையும் நிலத்தையும் பற்றிக்கொள்ளுங்கள்” என்ற செய்தியானது தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
காசாவிலிருந்து மக்களை வெளியேற நிர்பந்திப்பது என்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “காசா முழுவதும் உடனடியாக மனிதாபிமான நடவடிக்கை தேவை. அங்குள்ள மக்களுக்கு உணவு, எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். போர்களுக்கும் விதிகள் உண்டு” என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கிடையேயான போர் நீடித்து வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் நேற்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய கேலண்ட், “போரின் பாதை நீண்டதாக இருக்கும். இறுதியில் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சூர்யா 43 : சுதா இயக்கத்தில் கல்லூரி மாணவராக சூர்யா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!