பாலாறு விவகாரத்தில் அரசியல் உள்ளது – ராமதாஸ்

அரசியல்

”பாலாற்றின் தண்ணீர் அளவை அதிகரிப்பது குறித்து ஆந்திர முதல்வர் பேசியிருப்பதற்குப் பின்னால் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளன” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (செப்டம்பர் 23) பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம்.

அதற்காக, ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்திருந்தார். ஆந்திர மாநில முதல்வரின் இந்த அறிவிப்பால், தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

palaru river water increase capacity ramadoss answer

இந்த நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள தமிழக எல்லை கிராமமான புல்லூரில் கனக நாச்சியம்மன் கோவிலுக்கு அருகில் பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரத்திற்கு ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது.

இதன் கொள்ளளவை 2 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தைத்தான் ஆந்திர முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஜெகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளன. ஆனால், பன்மாநில ஆறான பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டுவதும், கட்டிய தடுப்பணைகளின் கொள்ளளவை அதிகரிக்க முயல்வதும் ஏற்க முடியாதவை.

உண்மையில் ஆந்திர அரசின் நோக்கம் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அணையின் உயரத்தை அதிகரிப்பதால் கிடைக்கும் கூடுதல் நீரை சேமிக்கும் வகையில் அங்குள்ள ஏரி, குளங்களை தூர் வாருவதும், புதிய ஏரி, குளங்களை அமைப்பதும் தான் ஆந்திர அரசின் திட்டம் ஆகும்.

palaru river water increase capacity ramadoss answer

இதன்மூலம் 2 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரத்தில் பல டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார்.

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.

புல்லூர் தடுப்பணைப் பணிகளை ஆந்திர அரசு நிறைவு செய்துவிட்டாலும் கூட, அதற்கு எதிராக 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்ததால், அடுத்தகட்டமாக ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணிகளையும், புதிய நீர்நிலைகளை கட்டும் பணியையும் ஆந்திர அரசு அப்போது நிறுத்திவைத்திருந்தது.

அப்போது நிறுத்திவைக்கப்பட்ட பணிகளைத்தான் இப்போது மீண்டும் தொடங்கப்போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புல்லூர் தடுப்பணைதான் பாலாற்றின் குறுக்கே ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கடைசி தடுப்பணை ஆகும். அந்த அணையின் உயரம் 12 அடியாக உயர்த்தப்பட்ட பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. கட்டுப்படுத்த முடியாத வெள்ளம் பெருக்கெடுத்த காலங்களில் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது.

palaru river water increase capacity ramadoss answer

புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டாலும்கூட தமிழகத்திற்கு தண்ணீர் வராது. அதனால் பாலாற்று பாசனப் பகுதிகள் பாலைவனமாகி விடக்கூடும். ஆந்திராவின் வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ள ஆந்திர அரசு, இப்போது பாலாற்று நீரையும் தடுக்க முயல்வது நியாயமல்ல.

ஆந்திர அரசு புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயல்வது தவறு. இதை அனுமதிக்க முடியாது. புல்லூர் தடுப்பணைக்கு எதிரான ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு அரசியல்ரீதியாக எதிர்க்காமல் விட்டதுதான், அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆந்திர அரசு ஈடுபடுவதற்கு காரணம் ஆகும். ஆந்திர அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வரச் செய்து, புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

சீன அதிபர் கைது? வைரலாகும் வீடியோ!

காங்கிரஸ் தலைவர் ரேஸ்: யார் இந்த அசோக் கெலாட்?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *