தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் அசையும் சொத்து என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகழ்ந்து பேசியுள்ளார்.
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்குத் தமிழக அமைச்சரவையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பொறுப்பு வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதன்பிறகு கோவை, திண்டுக்கல், திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,
“கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதுதான் எனக்குப் பெருமை. பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பேன்” என்று கூறிவருகிறார்.
இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
நேற்று முன் தினம் திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உதயநிதி மீது நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சருக்கு நிகராக செயல்படுகிறார்” என்றார்.
நேற்று திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,
“அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார். வரும் காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களையும் நம்பிக்கையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்” என்றார்.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி திமுகவின் சொத்து என்று புகழ்ந்துள்ளார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “மக்களின் சராசரி வயது 35 அல்லது 36ஆக உள்ளது. திமுக உறுப்பினர்களின் வயது இதைவிட அதிகமாக உள்ளது. இதிலும் மூத்த அமைச்சர்களின் வயது 70ஆக உள்ளது. எனவே, இந்த வயது இடைவெளியைக் குறைப்பதற்காகவும் இளைஞர்களை ஈர்க்கவும் இளைஞரணி செயலாளர், அமைச்சர் பொறுப்புக்கு வந்தது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது.
அதற்காக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கட்சியின் அசையும் சொத்து அவர். என்னோடு பாசத்தோடு பரஸ்பர உரிமையோடு நெருங்கிப் பழகுபவர்.
உதயநிதி பணியில் தேவையான முன்னேற்றங்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை அண்ணன் என்ற முறையில் செய்வேன்.
எனக்கு எத்தனையோ பதவி வந்தாலும் பண்பாளரின் மகன் என்பதுதான் என் முக்கிய அடையாளம். அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது. எல்லா மதத்தின் நல்ல கருத்தையும் பின்பற்றுபவன் நான்” என்று கூறினார்.
பிரியா
ரிஷப் பண்ட் விபத்து: ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்!
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!