பிடிஆர் – முதல்வர் சந்திப்பு : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்!

Published On:

| By Kavi

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் திமுக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்காது என்று அக்கட்சி செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதுபோல் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் விளையாட்டுத் துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் பற்றி பேசுவது போல் இடம் பெற்றிருந்தது.

இது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இந்நிலையில் இன்று (மே 1) அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒரு நிதியமைச்சர் ஒரு முதல்வரைச் சந்திப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் தன் மீதான ஆடியோ குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து கூட முதல்வரிடம் பேசியிருக்கலாம். அது எனக்குத் தெரியவில்லை. என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றும் எனக்குத் தெரியாது.

இந்த ஆடியோவில் பல இடங்களில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இந்த ஆடியோவை மறுத்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்காது என்றார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, நிதியமைச்சர் முதல்வரிடம் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் அங்கு இல்லை என்பதால் எனக்கு அதுகுறித்துத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

பிரியா

2026ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பேட்டி!

ரஜினியை விமர்சித்த ரோஜா… கொந்தளித்த சந்திரபாபு நாயுடு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share