பிடிஆர் ஆடியோ விவகாரத்தை அமலாக்கத்துறை கையிலெடுத்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இரவு சமூக தளங்களில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசுவது போல 28நொடிகள் கொண்ட ஓர் ஆடியோ கிளிப் வெளியானது.
அதில், விளையாட்டுத் துறை அமைச்ச்ர் உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் வருமானத்துக்கு அதிகமாக 30ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 21) சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்து வைத்தபின், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக பேசினார்.
“தாய் 8அடி பாய்ந்தால் குட்டி 16அடி பாயும் என்ற பழமொழி போல், தாத்தா, அப்பாவை தாண்டி 30ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கின்றனர். இதை நாங்கள் சொல்லவில்லை, அவர்களுடன் இருக்கிற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
எனவே மத்தியில் இருக்கிறவர்கள், எந்த அடிப்படையில் அவர் இதை சொன்னார் என்பதை விசாரிக்க வேண்டும். பழனிவேல் தியாகராஜன் உதயநிதியையும், சபரீசனையும் சொல்கிறார்.
இரண்டே வருடத்தில் 30ஆயிரம் கோடிரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அமலாக்கத்துறை கையிலெடுத்து விசாரிக்கவேண்டும். 30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயம் அல்ல.
இந்த பணத்தின் மூலம் சென்னையின் 25ஆண்டுகால வளர்ச்சியை இப்போதே கொண்டு வந்துவிடலாம்.
அந்த பணத்தை பறிமுதல்செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். உதயநிதி எதற்கு பிரதமரை நேரில் பார்த்தார் என தெரியவில்லை. நிதியமைச்சர் சொன்னதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் தியாகராஜனையும், உதயநிதியையும், சபரிசீனையும் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்.
உண்மையை நாட்டு மக்களிடம் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும். இது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை. மக்கள் இதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஜெயக்குமார்.
பிரியா
முதல்வரின் பதிலுரையைப் புறக்கணித்த அதிமுக: சபாநாயகர் வருத்தம்!
12மணிநேர வேலை: மசோதா நிறைவேற்றம், திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!