அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்காமல், எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 17) பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது. அம்பேத்கர் என்று சொல்வதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்துக்காவது போகலாம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் மற்றும் அமளியில் ஈடுபடுவதால் இரண்டாவது நாளாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு கட்சிகளிலும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் இதுவரை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிசம்பர் 19) தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கே பழனிசாமி? அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது.
முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.
சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.
யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று” என்று விமர்சனம் செய்துள்ளார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
234 கோடிகள்…திமுகவின் அதிரடி வசூல் திட்டம்!
‘சக எம்பிக்கள் மண்டையை உடைக்கத்தான் குங்ஃபூ படிச்சாரா? : ராகுல் மீது கிரண் ரிஜிஜூ விமர்சனம்!