திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்து இன்று(ஆகஸ்ட் 30) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பெண்கள் விடுதியில் நேற்று இணைய இணைப்பில் பிரச்சினை இருந்துள்ளது. அதைச் சரி செய்ய வந்த கல்லூரியின் ஒப்பந்த ஊழியர் ஒருவர், அங்கிருக்கும் ஒரு மாணவி முன்பு பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை விடுதியின் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார் அந்த மாணவி. ஆனால் விடுதியின் காப்பாளரோ, அந்த ஒப்பந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த மாணவியின் உடை குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனை அடுத்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, போராடும் மாணவர்களிடம் இன்று பேச்சு வார்த்தை நடத்திய திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கும் மற்றும் பாதிப்பிற்குள்ளான மாணவியிடம் விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்பார் என்று சொல்லி போராட்டத்தை முடித்துவைத்தார்.
இந்த நிலையில் தான் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை பகுதியில் மாணவி ஒருவருக்கு வடமாநிலத் தொழிலாளரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நான் சுட்டிக்காட்டி வந்தும், இந்த அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே இதுபோன்ற சம்பவங்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும் நிர்பயா சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால் தான் கையில் எடுப்பதாக இந்த அரசு எண்ணத்தில் இருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத, இதுகுறித்து புகார் அளிக்கும் பெண்களை கொச்சைப்படுத்த முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திருச்சி NIT-யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அனுமதி கொடுப்பதில் சிக்கல்… தள்ளிப்போகிறதா விஜய் மாநாடு?
”சிவாஜி சிலை உடைந்ததற்கு தலைவணங்கி மன்னிப்பு கேட்கிறேன்”: மோடி
யோகிபாபுவிடம் அப்படி நடந்தாரா அஜித்? – உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர்