ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த நிக்கோலா ஸ்டார்ஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து பிரதமராக இருந்து வந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பிரதமர் மற்றும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் அடுத்த ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கேட் ஃபோர்ப்ஸ், ஆஷ் ரீகன், ஹம்சா யூசுப் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதான சுகாதாரத்துறை அமைச்சர் ஹம்சா யூசுப் தேசிய கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இவர் அடுத்த ஸ்காட்லாந்து பிரதமராக பதவியேற்க உள்ளார்.
முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஹம்சா யூசுப் குடும்பம் 1960 காலகட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து ஸ்காட்லாந்தில் குடியேறினார்கள். இவர் கிளாஸ்கோ பகுதியில் உள்ள ஹட்சசன்ஸ் தனியார் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் பட்டப்படிப்பை முடித்தார்.
கால் செண்டரில் வேலை பார்த்து வந்த ஹம்சா யூசுப், ஸ்காட்லாந்து தேசிய கட்சியில் இணைந்தார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிளாஸ்கோ தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
ஸ்காட்லாந்து அமைச்சரவையில் இவர் போக்குவரத்து மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவில் வெற்றி பெற்றது குறித்து அவர் பேசுகையில்,
“ஸ்காட்லாந்தில் உள்ள மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரம் தேவைப்படுகிறது. நாங்கள் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவோம்.
ஒரு நாட்டின் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு ஒருவரது நிறமோ, மதமோ தடையாக அமையாது என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.
ஸ்காட்லாந்து மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை தீர்ப்பதில் நான் மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன்” என்றார்.
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டது உலக அளவில் மிக முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.
செல்வம்
கந்துவட்டிக் கொடுமை: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்… இதோ ஒரு சமகால சரித்திரம்!