பாகிஸ்தானில் நேற்று (பிப்ரவரி 8) 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக, இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக காலை முதல் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, இம்ரான்கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 57 தொகுதியில் முன்னிலையில் உள்ளனர். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 43 தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 தொகுதிகளிலும், மற்றவை 14 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இம்ரன்கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதால், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், தகவல் தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியதாக அக்கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரிப் கூறும்போது, “மக்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். உங்கள் அனைவரது கண்களிலும் வெளிச்சத்தை பார்க்கிறேன்.
நமது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றுள்ளது. பாகிஸ்தானை கட்டமைக்க உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பெரும்பான்மை பெற்றதாக நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கம்!
கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்