காலம் கடந்து விஜயகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜனவரி 25) அறிவித்தது. இதில் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு, கலைத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 26) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா, “நேற்றே எங்களுக்கு உள்துறை அமைச்சகத்தில் இருந்து போன் வந்தது. விஜயகாந்துக்கு பத்ம விருது அறிவிக்கிறோம் என்றார்கள். நன்றி மட்டும் சொன்னேன்.
இந்த விருது காலம் கடந்த விருது. காலம் எடுத்துச் சென்ற பிறகு கிடைத்த இந்த விருது கவுரமானது. இது அவர் உயிருடன் இருக்கும் போதே கொடுத்திருந்தால் விஜயகாந்த்தை நேசிக்கும் மக்களும், கட்சி நிர்வாகிகளும், நாங்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருப்போம்.
விஜயகாந்த் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கியிருப்போம். பரவாயில்லை…. இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்” என்றார்.
இளையராஜா மகள் மரணம் குறித்து பேசிய அவர், “இளையராஜாவின் மனைவி எனக்கு சகோதரி மாதிரி. அவர் இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பவதாரிணியை நான் சின்ன வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். எனது மடியில் அமர்ந்து விளையாடியிருக்கிறார். அந்த நாட்கள் என் கண் முன்னாடி வருகிறது.
விஜயகாந்துக்காக பல பாடல்களை பாடியுள்ளார். அவரை இழந்து வாடும் இளையராஜாவுக்கும், இசை உலகுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கிருஷ்ணகிரி தான் எனக்கு சொந்த ஊரு: முகமது ஜூபேர் பேட்டி!
முதலிடம் யாருக்கு?… தமிழ்நாடு-மகாராஷ்டிரா இடையே கடும் மோதல்!