பள்ளிகளில் நடந்து வரும் சாதி மோதல்களை குறிப்பிட்டு ”தந்தை பெரியாரும், காமராஜரும் அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா?” என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக சாதி ரீதியான கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. கடந்த ஆண்டு புதுக்கோட்டை அருகேயுள்ள வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சமீபத்தில் நாங்குநேரியில் சாதி வெறியால் பட்டியலினத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசிய அருவருப்பான சம்பவமும் நடந்தேறியுள்ளது.
குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதுவும் சாதிய மோதலை தூண்டும் திட்டமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படி சாதி வெறி கொடுமைகள் தற்போது பள்ளிவரை வந்துள்ளதை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பள்ளிகளில் நடந்து வரும் சாதி மோதல்களை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கெதிராக கடும் விமர்சனத்தை இன்று (ஆகஸ்ட் 19) முன்வைத்துள்ளார்.
அவர் தனது சமூகவலைதள பதிவில், ”மாணவர்கள் இடையே சாதி உணர்வும் சாதிப் பகையும் வளர்ந்து வருவது வேதனையும் அவமானமும் அளிக்கிறது.
தந்தை பெரியாரும், காமராஜரும் அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எந்தப் பண்புகளைக் கற்பிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
சாதி உணர்வையும் சாதிப் பகையையும் நெஞ்சில் கொண்டுள்ள எந்த மாணவரும் “கற்றவர்” என்ற தகுதியை அடைய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சக மாணவரை “பிற” சாதி என்று பகை காட்டும் மாணவர்கள் இருக்கும் போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பெருமைப்படுவது கேலிக்கூத்து” என்று ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
ரொமான்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி