கம்யூனிசத்தை முன்னெடுத்த தலைவர்கள் சுய நல வாதிகளாக மாறிவிட்டனர் என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா?” என முதல்வர் ஸ்டாலினை நோக்கி நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது பேச்சை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவில் திமுக எம்.பியும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா கலந்துகொண்டார்.
சுய நலவாதிகளாக மாறிய கம்யூனிச தலைவர்கள்!
அவர் பேசுகையில், ”தத்துவம் மீது தலைவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிசத்தில் கோளாறு இல்லை. கம்யூனிசம் செம்மையானது. ஆனால், அதை முன்னெடுத்த தலைவர்கள் நீர்த்துவிட்டதால், சுய நலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கம்யூனிச தத்துவங்களும் நீர்த்துவிட்டது.
எங்கள் தாத்தா சம்பாதித்ததை பத்திரமாக பார்த்துக்கொண்டாலே எங்களுக்கு போதும். இனிமேல் ஒரு பெரியார் எங்களுக்கு தேவையில்லை. ’சொந்த புத்தி வேண்டாம்.. நான் தந்த புத்தியை வைத்துக்கொள்ளுங்கள்’ என பெரியார் சொல்லி இருக்கிறார்.
தத்துவத்தை தரும் தலைவர்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் தத்துவத்தை காப்பாற்றும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். தத்துவத்திற்கு சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தலைவரும் எங்களுக்கு இருக்கிறார். திராவிடம் தோற்காது“ என்று ஆ.ராசா பேசியிருந்தார்.
திராவிடம் தோற்காது என்று கூறிய ராசா, கம்யூனிசத்தை முன்னெடுத்த தலைவர்கள் நீர்த்துவிட்டதால், சுய நலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கம்யூனிச தத்துவங்களும் நீர்த்துவிட்டது” என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சிபிஎம் கட்சியின் புதிய செயலாளர் பெ. சண்முகம், ஆ.ராசவின் பேச்சை கண்டித்தார்.
திமுக தவறு செய்தால் போராட்டம் தொடரும்!
அவர், “கம்யூனிஸ்ட் தலைவர்களின் செயல்பாடு எப்படி நீர்த்து போகும்? இடைவிடாத போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இது தமிழ்நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியும்.
எனவே ஆ.ராசாவின் குற்றச்சாட்டு தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. அவரது பேச்சில் கம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்சித்த பகுதி மட்டுமே சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு வீடியோவையும் பார்த்த பிறகு உரிய முறையில் நாங்கள் பதிலளிப்போம்.
திமுக செய்த தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பு என்றால், அவர்கள் செய்யும் நல்லதற்கும் நாங்கள் தான் பொறுப்பு என்று கூற முடியுமா? அதை அரசாங்கம் செய்தது, திமுக செய்தது என்று ஊடகங்கள் பேசும். அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர்கள் செய்யும் நல்லதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தவறு செய்யும் போது, அதை தவறு என்று நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். சட்டமன்றத்தில் விமர்சிக்கிறோம்.
மத்தியில் உள்ள பாசிச சக்தியான பாஜகவை எதிர்த்து திமுக நடத்தி வரும் போராட்டம் முக்கியமானது. அவசியமானது. அதற்காக நாங்கள் திமுகவுடன் நிற்கிறோம். அதேநேரத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து திமுகவுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். இனிமேலும் அதை செய்வோம்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் கார்… வீடியோ வைரல்!
ரூ.11 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்… ஒரே மீனுக்கு இவ்வளவு விலை ஏன்?