வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் 1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனம் தமிழகத்திலிருந்து ரயிலில் சென்று டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு இல்லத்தில் அவரை சந்தித்து நினைவு பரிசாக செங்கோல் கொடுத்துள்ளார். நேரு அந்த செங்கோலை திருவாவடுதுறை ஆதீனத்திடமிருந்து வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் பிரதமர் நேருவுக்கு பல நினைவு பரிசுகள் வந்தன. அந்த நினைவு பரிசுகளை பத்திரப்படுத்தி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார்கள்.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியில் இல்லை. அவர் பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ள சென்றார். அந்த நிகழ்வை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு தான் அவர் டெல்லி திரும்பினார். பின்னர் இரவு 12 மணிக்கு நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள பேழையில் நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல் என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது. வாக்கிங் ஸ்டிக் என்று எழுதவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவது தான் உண்மையான வரலாறு. வரலாறை நம்புங்கள், புனைகதைகளை நம்பாதீர்கள்.
மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விளையாட்டு துறை அமைச்சரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ சென்று அவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்வது கண்டனத்துக்குரியது. இது ஜனநாயக நாடு. போராட்டம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது.
மோடி அரசை பொறுத்தவரை சுதந்திரமே மோடியால் தான் கிடைத்தது. அதற்கு முன்பு சுதந்திரமே இல்லை என்று கூறுவார்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை அழைக்காததால் காங்கிரஸ் கட்சி விழாவை புறக்கணித்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்த்து வருவதற்காகத்தான். அதிமுக ஆட்சியில் நடத்திய தொழில் முனைவோர் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் வந்தது என்பது குறித்து தெளிவுபடுத்தி விட்டு தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ள வெளிநாட்டு பயணம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வெற்றிக்கோப்பை!
சிஎஸ்கே வெற்றிக்கு யார் காரணம்? அமைச்சருக்கு அண்ணாமலை பதில்!