இந்த தேர்தல் நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “நேருவுடன் தன்னை மோடி ஒப்பிட்டுக்கொள்வதை மக்கள் நிராகரிப்பார்கள். மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கக்கூடிய மோடியை வாழ்த்துகிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில் பாஜக கூட்டணி அரசின் செயல்பாடுகளை கண்டிப்பாக கண்காணிப்போம்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இவிஎம் மெஷினை நாங்கள் நிராகரிக்கவில்லை. விவிபேட் இயந்திரத்தில் வரும் தாளை வாக்களிப்பவர்களே எடுத்து பெட்டியில் போடலாம். சிறிய மாற்றம் செய்தால் இவிஎம் விவிபேட் முறையில் எந்த சந்தேகமும் இருக்காது.
10-ல் 4 பேர் இவிஎம் மெஷின் குறித்து சந்தேகிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் இவிஎம் மெஷினை பற்றி குறை சொன்னதே கிடையாது. ஆனால், இவிஎம் மெஷினை மேலும் மெருகூட்டி, செம்மைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு.
இந்த தேர்தலில் தார்மீக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு தான். தார்மீக தோல்வி நரேந்திர மோடிக்கு தான். அதனால் வெற்றி பெற்றதை நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்கள் களையிழந்து, உற்சாகமிழந்து இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
மோடியின் உளவியல் மனநிலையை ஆராயக்கூடிய அளவிற்கு அந்த துறையில் நான் நிபுணர் அல்ல. ஆனால், அவர் கடந்த காலத்தில் குஜராத்தில் முதல்வராக இருந்தபோதும், பிரதமராகவும் இருந்தபோதும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கிறவர்.
மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உள்நாட்டு அகதிகளாக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள்.
இந்த களங்கத்தை துடைப்பதற்கு அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட செல்லவில்லை. அங்கே மோசமான அரசு நடைபெறுகிறது.
மணிப்பூரில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அவருடைய உளவியல் மனநிலையை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
மக்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள். சோதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு கலக்கமே இல்லையே” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த ஐந்து ஆண்டுகள் வளர்ச்சி தொடரும்: மோடி கேரண்டி!