இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் ஆட்சி மொழியாக்கி, அதனைத் திணித்தால் மற்ற மொழிகள் அழிந்துபோகும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை கலையரங்கில் வைரமுத்துவின் பிறந்தநாள் மற்றும் அவர் இலக்கியத் துறையில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக இலக்கிய பொன்விழா நிகழ்ச்சி நேற்று இரவு(ஜூலை 13) நடைபெற்றது. இதில் எம்.பி ப.சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேவா என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வைரமுத்துவைப் பாராட்டிப் பேசிய ப.சிதம்பரம், தமிழ்மொழி ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “21ஆம் நூற்றாண்டு முற்பகுதியின் மிகச் சிறந்த கவிஞர் வைரமுத்து. சிறுகதைகள், 7500 கவிதைகள், தமிழாற்றுப்படை ஆய்வுக் கட்டுரை நூல் என்று தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் மிகப்பெரியது. அவர் 17 வயதிலிருந்து புத்தகம் எழுதத் தொடங்கியவர். வடுகபட்டியில் இருந்து வாசிங்டன் வரை தமிழின் புகழைப் பரப்பி இருக்கிறார். தமிழ் மொழி பொலிவுடன் இருக்கும் வரை வைரமுத்துவை வாழ்த்தும். தமிழை வளர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு (வைரமுத்து) இன்னும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் மொழியின் அவசியம் குறித்து அவர் கூறுகையில், “எண்ணம், செயல் இரண்டையும் இணைப்பது மொழி. இந்த உலகில் 7000 மொழிகள் இருக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சி பீடத்தில் இருந்த மொழிகள் எல்லாம் இறந்துவிட்டன. பழம்பெரும் மொழியான இலத்தீன் ஏறத்தாழ இறந்துவிட்டது. கிரேக், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் பல்வேறு மொழிகள் அழிக்கப்பட்டுவிட்டன. சீனாவில் மாண்டரின் மொழிகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட பின் பல வட்டார மொழிகள் அழிந்துவிட்டன.
மொழி என்பது மிகவும் முக்கியம். ஆட்சியில் இல்லாத மொழி அழிந்து போகும். இந்தியாவில் ஒரு மொழியை ஆட்சி மொழியாக்கினால், அதனைத் திணித்தால் பிற மொழிகள் அழிந்துபோகும். அதுகுறித்த அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, மதத்தில் வெவ்வேறு அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் நம் அனைவருக்கும் பொது அடையாளம் தமிழ். தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இன்னொரு மொழி நம்மை ஆள இடம் தந்து விடக் கூடாது. மொழி தான் நமக்கு அடையாளம்; மொழியை நாம் ஆள வேண்டும். மொழி நம்மை ஆள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
– கிறிஸ்டோபர் ஜெமா