நிதியமைச்சர் சொன்னது உண்மைதான் : ப.சிதம்பரம்

அரசியல்

நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைதான் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றார்.

அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், “இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதாகப் பார்க்காமல், அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைவதாகத்தான் பார்க்கிறோம்.

பல வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை” என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107ஆவது இடத்தில் இருப்பதை குறிப்பிட்டு,

”பிரதமரும் அவரது அமைச்சர்களும் இந்தியாவில் பசியால் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, மாறாக மற்ற நாடுகளில் உள்ளவர்கள் பசியாக உணர்வதில்லை என்று கூறி வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மக்களை ஏமாற்றுவார்கள்” என்று விமர்சித்தார்.

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தோற்றவர்கள் எப்போது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் விமர்சித்துள்ளார்.

அவர் இன்று (அக்டோபர் 17) தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரூபாய் வீழ்ச்சியடைவில்லை. அமெரிக்க டாலர்தான் வலுவடைகிறது என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அது முற்றிலும் உண்மை.

தேர்தலில் தோல்வியடைந்த ஒரு வேட்பாளரோ அல்லது கட்சியோ தேர்தலில் தோல்வி அடைந்தால் சொல்வது இதுதான். நாங்கள் தோல்வியடையவில்லை. மற்றக் கட்சியினர் வெற்றி பெற்றுவிட்டனர் என்று சொல்வார்கள் ”என கிண்டல் செய்துள்ளார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் விழவில்லை பள்ளத்துக்குள் இருக்கிறோம். நாங்கள் பட்டினியாக இல்லை சாப்பிடாமல் இருக்கிறோம்.

விலை ஏறவில்லை நாங்கள் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம். ரூபாய் இறங்கவில்லை டாலர்தான் ஏறி ஒய்யாரம் காட்டுகிறது. இவ்வளவையும் புரிந்து கொண்டால் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் புலி’ என தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமனின் கருத்தை விமர்சனம் செய்துள்ளார்.

“நாங்கள் போட்டியில் தோற்கவில்லை, எதிர் அணி வெற்றி பெற்று விட்டது’ என்று இணையத்தில் வந்த ஒரு மீமை ஷேர் செய்துள்ளார். மேலும், ‘வாழ்த்துகள், ஜேஎன்யு ஒருபோதும் தோல்வியடையாது’ என தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பிரியா

“அதிமுகவில் ஓ.பி.எஸ் ஒரு கரும்புள்ளி” : சி.வி.சண்முகம்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *