காலாவதியான ’காமராஜர் ஆட்சி’ வாசகம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

-ஜாசன்

1967-இல் பேரறிஞர் அண்ணா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி அப்போது சட்டசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெற்றார்.

இது அண்ணாவின் தேர்தல் வியூகத்திற்கு கிடைத்த வெற்றி. தேர்தலின்போது,   “தமிழ்நாட்டில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது, இந்த தேர்தலில் நமது வெற்றி அப்படி இருக்க வேண்டும்” என்று சொல்லி அவர் வெற்றி பெற்றார்.

அண்ணா சொன்னபடி இன்று வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கூட்டணி என்ற பெயரில்  திராவிட கட்சிகள் தரும் தொகுதிகளை வைத்துக் கொண்டு அவர்கள் உதவியுடன் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதை வழக்கமாகவே வைத்துக்கொள்ள அவர்கள் பழக்கம் ஆகிவிட்டார்கள்.

அதே சமயம் திடீரென்று ஞானோதயம் வந்தது போல் அவர்கள் காமராஜர் ஆட்சி பற்றி பேசுவார்கள். தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பார்கள். ஆனால், தமிழக காங்கிரஸ் அதற்கான முயற்சியாக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. தீவிர காமராஜர் பக்தரான மூப்பனார் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உண்மையாகவே முயற்சி செய்தார்.

அவர் திட்டம் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லாமல் நாம் தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றியோ தோல்வியோ அதை ஏற்றுக் கொண்டு நம் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மூப்பனாரின் இந்த திட்டத்தை அவரது ஆதரவாளர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது எம்.எல்.ஏ, எம்.பி ஆகி காலத்தை கடத்த வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை கதர் சட்டைகளின் செயல்பாடாக இருந்தது இன்று வரை அது தான் நடக்கிறது.

தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். டெல்லியில் யாராவது ஒரு வேண்டியவரை பிடித்து முயற்சி செய்தால் மாநிலத் தலைவராகி விடலாம். சட்டமன்ற பாராளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு கூட கோஷ்டிக்கு தொகுதி பங்கீடு என்ற அளவில் தான் இருக்கும். வேட்பாளர்கள் தேர்வு பற்றி காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

சஞ்சய் ராமசாமி இவர் அன்றைய பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டவர். வழக்கறிஞர் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு தேர்தல் ஆசை வந்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் ராமசாமி  தனது மனைவி மூலமாக  நடிகை ஸ்ரீதேவிக்கு அழுத்தம் தர அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை சந்தித்து சில நிமிடம் பேசினார்.

அடுத்த சில தினங்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சஞ்சய் ராமசாமி பெயரும் இருந்தது. அதே சமயம் ஜெயலலிதாவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் அரசியல் செய்தபோது சட்டசபையிலும் சட்டசபைக்கு வெளியிலும் சுமார் ஐந்து சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக குரல் தந்தார்கள். அவர்களில் சஞ்சய் ராமசாமியும் ஒருவர். அதன் பிறகு  அவர் அதிமுகவில் அடைக்கலமாகி காணாமல் போனது வேறு கதை.

இப்போது செல்வப்பெருந்தகை விஷயத்துக்கு வருவோம். பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் “தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை நாம் சார்ந்திருக்கப் போகிறோம் சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற  கட்சிகள் சாராத நிலை வேண்டும் என்றால் அதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு  நாம் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார்.

அதே கூட்டத்தில் பேசிய இவிகேஎஸ் இளங்கோவன் செல்வப் பெருந்தகைக்கு பதில் சொல்வது போல்,  “நாம் ஆசைப்படலாம், பேராசைப்படக்கூடாது.  தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களில் நாம் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திமுகவும் திமுக தலைவர் ஸ்டாலினும்தான்” என்று பேசினார்.

ஏற்கனவே இவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாட்டில் இப்போது நடப்பது காமராஜர் ஆட்சி தான் என்று ஸ்டாலினை பாராட்டி பேசி இருக்கிறார். சென்ற ஆண்டு ஒரு பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தலுக்கான கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையின்போது,  தனித்துப் போட்டி- சுயமாக வளர வேண்டும்- காமராஜர் ஆட்சி போன்ற சிந்தனை எல்லாம் ஏன் வரவில்லை என்று செல்வப்பெருந்தகையை யாரும் கேட்க முடியாது. தேர்தல் முடிந்த பின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு  சில நாட்களுக்கு முன்  திடீரென காமராஜர் ஒரு வேளை கனவில் வந்து  அவருக்கு நினைவுபடுத்தி இருக்க கூடும்.

சரி காமராஜர் ஆட்சி என்கிறார்களே…  அதைப் பற்றி நாம் பார்ப்போம்.  காமராஜர் ஆட்சி பற்றி பெருமையாக பேசும் காங்கிரஸ் காரர்கள் குறிப்பிடும் ஒரே விஷயம், அவரின் மதிய உணவு திட்டம். காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு உத்தரவாதமாக கிடைத்தது. பள்ளிக்கு வந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது காங்கிரஸ் தரப்பு வாதம்.

காமராஜர் மதிய உணவு திட்டம் என்ற ஒரு கோடு திராவிடக் கட்சிகள் மூலம்  இன்னும் பெரிதானது.  அதை  மேலும் மேலும்  பயனுள்ளதாக செம்மைப்படுத்தி பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கையை உயர்த்துவது,  கூடவே சத்தான ஒரு உணவு ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குவது என்று திட்டம் தீட்டி மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டம் என்று  மெருகூட்டினார்கள் திராவிட ஆட்சியாளர்கள்.

அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவுக்கென்று தனித்துறை, தனி அமைச்சர், நிதி ஒதுக்கீடு என்று  அதை மேலும் மேலும் செம்மைப்படுத்தினார். காமராஜர் ஆட்சி காலத்தில் சத்துணவு குழந்தைகளுக்கு வழங்கியது ஆசிரியர்கள்.  ஆனால், சத்துணவு வழங்க என்று தனியாக ஊழியர்கள் நியமனம் என்பதெல்லாம் திராவிட ஆட்சியில் தான் சாத்தியமாயிற்று.

பள்ளிக் கல்வியில் காமராஜரையும் தூக்கி சாப்பிடுவது போல் திராவிட கட்சிகள் திட்டம் தீட்டின. முதலாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு பிளஸ் டூ வரை மாணவர்கள் வந்தால் போதும் அனைத்தும் இலவசம். பாட புத்தகங்கள்,  நோட்டுப் புத்தகங்கள்,  புத்தகப்பை காலணி, இலவச சீருடை சைக்கிள், மடிக்கணினி…  இது தவிர வழக்கப்படி சத்தான உணவு என்று மாணவர்கள் வந்தால் போதும் அரசு அவர்களைப் பார்த்துக் கொள்ளும், எந்த கல்விக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக பள்ளி இறுதி கல்வியை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.

இன்று அரசு பள்ளி  மாணவர்கள் தனியார் பள்ளி மாணவருடன் போட்டி போடும் அளவுக்கு மாணவர்களின் படிப்பறிவு வளர்ந்திருப்பதற்குக் காரணம் திராவிட ஆட்சிதான்.

அரசு பள்ளி படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு அவர்களுடைய கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் திட்டம் எல்லாம் திராவிட ஆட்சியில் தான் சாத்தியமாயிற்று.

அதை மேலும் மேம்படுத்த அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார்.  பள்ளியில் காலை சிற்றுண்டி அறிமுகம். இப்படி பள்ளி மாணவர்களுக்கு பார்த்து பார்த்து செய்யும் ஏதாவது ஒரு காங்கிரஸ் மாநில ஆட்சியை செல்வப் பெருந்தகையால் சுட்டிக் காட்ட முடியுமா ?

இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 27 சதவீதம். இதில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தான்.

உயர்கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிக அளவு உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதற்கு இங்கிருக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையே போதுமான ஆதாரம்.

காமராஜர் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தினார் அவ்வளவுதான்.  அதை மேலும் மேலும் மாணவர்களுக்கு எப்படி பயனுள்ளதாக ஆக்குவது என்று யோசித்து யோசித்து திட்டம் தீட்டியது திராவிட கட்சிகள் தான். இதை செல்வப்பெருந்தகை தெரிந்து கொள்வது நல்லது.

1967 தேர்தலில் காமராஜர் பெ.சீனிவாசன் என்ற திமுக மாணவர் அணி நிர்வாகியிடம் தோற்றுப் போனார். காமராஜர் தோற்றுப் போனதை கொண்டாடி திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்க முற்பட்டபோது அண்ணா அதை தடுத்தார்.

’காமராஜரின் தோல்வி கொண்டாட கூடியது அல்ல. அவரது தோல்வியை கொண்டாடாதீர்கள் ‘என்ற அண்ணா,  ’காமராஜர் மாதிரி இன்னொரு தமிழர் தலைவர் இந்தியாவிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் ‘என்றும் சொன்னார்.

ஆனால்,  திராவிடக் கட்சிகளின் வெற்றியை தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது என்று கருத்து சொன்னது அன்றைய காங்கிரஸ்.

அதே சமயம் காமராஜர் மாநில உரிமைகளுக்காக எத்தனை முறை பாராளுமன்றத்தில் பேசியிருப்பார் என்று கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.

கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தனது செல்வாக்கை பயன்படுத்தி மாநில உரிமைகளுக்கு போதிய அதிகாரங்கள் வாங்கித் தர எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதேசமயம் 1967 முதல் பாராளுமன்றத்தில் மாநில உரிமைக்காக இன்று வரை குரல் கொடுப்பது திராவிட முன்னேற்றக் கழகம் தான். இதையும்  செல்வப் பெருந்தகை தெரிந்து கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!

பணப்பரிமாற்ற வழக்கு: செந்தில் பாலாஜி புதிய மனு… ED பதிலளிக்க உத்தரவு!

நீதிபதி சந்துரு பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் – கொந்தளித்த எச்.ராஜா

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *