பிறமொழியை திணித்தால் ஏற்கமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

”பிற மொழிகளை திணித்தால் ஏற்கமாட்டோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இசைச் சங்கத்தின் 80ஆவது ஆண்டு விழா இன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ’தொல்லிசைக் களஞ்சியம்’ கண்காட்சியை பார்வையிட்டதுடன், இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.சௌமியாவுக்கு, இசைப்பேரறிஞர் பட்டத்தையும், மயிலை பா. சற்குருநாதன் ஒதுவாருக்கு பண் இசைப்பேரறிஞர் பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தார்.

தவிர, ’செம்புலப்பெயல் நீர்’ என்ற நாட்டிய நாடக ஒலிப்பேழையையும் முதல்வர் வெளியிட்டார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் தமிழ் இசை, இந்த அளவுக்கு கொடி கட்டி பறக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் இந்த தமிழ் இசை சங்கம்தான். இது வெறும் கட்டடமாக (அண்ணாமலை மன்றம்) நிற்கவில்லை.

கலையின் சின்னமாக நிற்கிறது. இசையின் சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. தமிழின் அடையாளமாக நின்று கொண்டிருக்கிறது. இந்த கட்டடம்தான் தமிழ் இசையைக் கோட்டை கட்டிக் காத்த அரங்கம்.

இதில் நாம் எல்லாம் இன்று மகிழ்ச்சியுடன் கூடியிருக்கிறோம். பல நூற்றாண்டுக் காலமாக நம்முடைய தமிழ் நிலப்பரப்பு, பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு ஆளானது.

அந்நியர் ஆக்கிரமிப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அந்நியர் படையெடுப்பால் நம்முடைய இனம், உரிமை ஆகியவை இழக்கப்பட்டன. அந்நியர்களின் ஊடுருவலால் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.

other language not allowed stalin speech

ஆதிக்க வர்க்கத்தினரால் தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு தாக்குதல்களால் தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சூழலில் தமிழ் இனத்தின் உரிமையைக் காக்க திராவிட இயக்கம் எழுந்தது.

தமிழ் மொழியைக் காக்க மறைமலை அடிகள் தலைமையிலேயே தனித்தமிழ் இயக்கம் பிறந்தது. தமிழ்க் கலையைக் காக்க, இந்த தமிழ் இசை சங்கம் எழுந்தது.

தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும் தமிழ் இசை இயக்கமாக இருந்தாலும் அனைத்திலும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்துப் போற்றியது. தமிழ் நாட்டில் தமிழ் மேடைகளில் தமிழ் பாட்டுகள் பாடுவது கேவலம் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. தமிழ் பாடினால் மேடை தீட்டாகிவிடும் என்று கணக்காகும். தமிழை, நீஷ பாஷை என்று பழித்தார்கள்.

தமிழகத்தில் தமிழ் மேடைகளில் தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட வேண்டியிருந்தது. தமிழில் பாடச் சொல்லி திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் வேறு வழியின்றி ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு, ’துக்கடா பாட்டு’ என்று பெயர்.

தமிழை அவர்கள் துக்கடாவாக்கி வைத்திருந்தனர். 1936ஆம் ஆண்டு பண்டைய தமிழ் இசை குறித்து யாழ் நூலை இயற்றிய ஆசிரியர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை, தந்தை பெரியார் தன்னுடைய விடுதலை நாளிதழில் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார்.

other language not allowed stalin speech

இதிலிருந்து இசை இயக்கம் என்பது, அரசியல் முழக்கமாகவே மாறியது. மகாகவி பாரதியார், தமிழ்த்தாத்தா உ.வே.சா., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மூதறிஞர் ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.சி., ஆர்.கே.சண்முகனார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இம்முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதில் மகத்தான பங்களிப்பு செய்தவர்தான் இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கும் அண்ணாமலையார்.

அவர், தமிழ் இசைக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அரசர் என்றால், அவர் தமிழ் இசையைக் காத்த அரசர் ஆவார். 1952ஆம் ஆண்டு இந்த ராஜா அண்ணாமலை மன்றம் உருவானது. அதாவது, நான் பிறப்பதற்கு முதல் ஆண்டு. இன்று, நான் 80ஆம் ஆண்டு விழாவில் வந்து பங்கெடுத்திருக்கிறேன்.

அண்ணாமலையார் குடும்பத்தின் இந்த தமிழ் இசை பங்களிப்பை யாரும் மறக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. தமிழ் இசையை தொய்வில்லாமல் தொடருங்கள்.

அதுதான் எல்லோருடைய விருப்பம். அதைத்தான் நானும் நினைவுப்படுத்துகிறேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதைப்போல இசையிலும் தமிழ் செழிக்க வேண்டும். மொழிதான் ஓர் இனத்தின் ரத்த ஓட்டம். மொழி அழிந்தால் இனமும் அழிந்துபோகும்.

எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. அதனால் பிறமொழி ஆதிக்கத்தை ஒழிப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

ஒருவர் விரும்பினால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால், திணித்தால் ஏற்கமாட்டோம். இதுதான் நம்முடைய மொழிக் கொள்கை” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஜெ.பிரகாஷ்

எல்லை பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி!

டிஜிட்டல் திண்ணை: கட்சியை கலைக்கிறாரா கமல்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “பிறமொழியை திணித்தால் ஏற்கமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

  1. இங்கே,தமிழில் மட்டுமே பாடிய தண்டபாணி தேசிகர் என்ற பாடகரை மறந்தது எனோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *