டிஜிட்டல் திண்ணை: 13  பள்ளிகளில் பேச ஏற்பாடு… மகாவிஷ்ணுவுக்காக கல்வித் துறை அமைத்த வாட்ஸ் அப் க்ரூப்! -பகீர் ஆதாரங்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்சில் சில ஸ்க்ரீன் ஷாட்டுகள் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“சென்னையில் இரு அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசிய சர்ச்சைப் பேச்சு அவரை சிறையில் தள்ளிய நிலையில், 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியும் அவருக்கு முடிந்திருக்கிறது.

இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனும் தனது விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்துவிட்டார்.  அதே நாளில் அசோக்நகர் பெண்கள் பள்ளி  தலைமை ஆசிரியர் தமிழரசி கல்வித்துறை செயலாளர் மதுமதியை சந்தித்து தன் தரப்பிலான  ஒரு மனுவைக் கொடுத்துள்ளார்.

இப்படி போலீஸ் மகாவிஷ்ணுவிடம் நடத்திய கஸ்டடி விசாரணை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த அறிக்கை,  தலைமை ஆசிரியர் தமிழரசி துறைச் செயலாளரிடம் கொடுத்த மனு என இந்த விவகாரத்தில் மூன்று ஆவணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக  உள்ளன.

இந்த நிலையில்  மின்னம்பலம் விசாரணையில் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.

’அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மகாவிஷ்ணுவின் உரை நிகழ்ச்சிக்கு ஜெ.கே. பவுண்டேஷன், பரம் பொருள் பவுண்டேஷன் மற்றும் கல்வித்துறை ஆகியவை இணைந்துதான் ஏற்பாடு செய்துள்ளன.

ஜெகே, பவுண்டேஷனுக்கு இதேபோல 13 அரசு பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துள்ளது  சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஒ) அலுவலகம்.

அதன் முதல் கட்ட நிகழ்வுகள்தான் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேசன் மற்றும் ஜெகே பவுண்டேசன் இணைந்து நடத்தியது.

இந்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே 13 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ,. டி.இ.ஓ.  ஆகியோர் அடங்கிய வாட்ஸ் அப் க்ரூப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி அசோக்நகர் பள்ளியில் மகாவிஷ்ணு  பேச்சைக் கேட்டதுமே   அவர் பேச்சு மதம் சார்ந்துள்ளது. அதனால் சைதாப்பேட்டை பள்ளிக்கு மகாவிஷ்ணு வேண்டாம் என்று அன்றே சிஇஓ மார்ஸ் -க்கு மெசேஜ் போட்டுள்ளார் சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம்.

மெசேஜை பார்த்த சி. இ. ஒ. மார்ஸ்  உடனடியாக தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரத்தின் கைபேசிக்கு வீடியோ கால் மூலமாக பேசியுள்ளார்.

’நிகழ்ச்சியை நிறுத்தாதீங்க…  நடத்துங்க.  அவர் அசோக்நகர் பள்ளியில பேசினது போல பேசமாட்டார்… அவர்கிட்ட சொல்லியாச்சு… நாம அவருக்கு  கோ ஆபரேட் செய்யணும்’ என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சித் துவங்கியதும் மீண்டும் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் கைப்பேசிக்கு வீடியோ காலில் வந்த சி இ ஒ,  மேடையில் இருக்கும் அந்த மகாவிஷ்ணு விளம்பர போர்டுகளை பற்றியும் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

ஆனால் மகாவிஷ்ணு பேச்சு சர்ச்சையானதும் பழியைத் தூக்கி தலைமை ஆசிரியர்கள் மீது போட்டுவிட்டனர்.

ஞானசேகரன்

இதை கடுமையாக  எதிர்க்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் இந்த  தொடர் நிகழ்வுகளின் பின்னணியை  தெரிவித்தனர்.

’அரசு பள்ளிகளுக்கு பூமி பவுண்டேசன்,  ஜெகே பவுண்டேசன், அகஸ்தியா பவுண்டேசன் போன்ற தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரையில்தான் மதிய உணவு கிடைக்கிறது.  ஆனால் +1, +2 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது இல்லை. தற்போது சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரு பவுண்டேசன் மதிய உணவு வழங்கி வருகிறது. இதேபோல அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கும் இந்நிறுவனங்கள் உதவி வருகின்றன.

அதனால் இந்த நிறுவனங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்படும்  நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த அனுமதி கொடுக்கிறது கல்வித்துறை.

இந்த வகையில்தான் மகாவிஷ்ணு நடத்திய நிகழ்ச்சிக்கும் பள்ளிக் கல்வித் துறையின் சி.இ.ஓ. அலுவலகம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குரூப்பில் ஆகஸ்டு 28 ஆம் தேதி  சிஇஒ மார்ஸ் மெசேஜ் ஒன்று போட்டுள்ளார்.

“அசோக்நகர் பள்ளி போன்று நிகழ்ச்சியை முழுமையாக நடத்த இயலாமல் போய்விட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் .  போன ஜென்மத்தில் பாவம் செய்ததால் இந்த ஜென்மத்தில் ஊனம் ஏற்படுகிறது என்ற குருஜியின் விளக்கம்…  நன்றியுரை பேசுவதற்காக, காத்திருந்த பார்வை திறனற்ற  ஆசிரியர் சங்கர் மறுத்து பேசியதால், விவாதமாக மாறி சிஇஓ வை விட ஆசிரியர் அறிவில் பெரியவரா என குருஜி பேசிவிட்டார்”- என நீள்கிறது சிஇஒ மெசேஜ்.

ஆக இதேபோல இன்னும் 11 பள்ளிகளில் மகாவிஷ்ணுவை பேச திட்டமிட்டிருந்தார்கள் என்றும், இதற்குக் காரணம் தன்னார்வ நிறுவனங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்புதான் என்பதும் இப்போது தெரிகிறது. ஆனால் இதில் தண்டனை பெற்றவர்கள் தலைமை ஆசிரியர்கள்.

இதனால் சி.இ.ஓ. மார்ஸிடம் தலைமை ஆசிரியர் சங்கத்தினர் பேசியுள்ளனர். அதற்கு அவர்,   ‘நானும் கொள்கைவாதிதான். உங்க சங்கத்துல நானும் இருந்திருக்கேன்.  மேலே உள்ளவங்க சொல்லச் சொன்னாங்க.  அதனால் மினிஸ்டர் ஆபிசில் சொன்னாங்க இயக்குனர் ஆபிசில் சொன்னாங்க என்று நான்  குறிப்பிட்டு சொல்ல முடியுமா ‘ என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

தலைமை ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டத்தையும் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களின் இடமாற்றம் ரத்து செய்யப்படவில்லை என்றால் இதை வெளிப்படையாக பேச அவர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஆட்சியில் அதிகாரம் : முழு வீடியோவை வெளியிட்ட திருமாவளவன்

பிரதமர் வீட்டில் புதிய உறுப்பினர் தீப ஜோதி

+1
0
+1
0
+1
1
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *