சென்னையில் காவலர் குடியிருப்பில் வசித்த காவலர் மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், வீட்டை காலி செய்யும்படி 2014ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு ஆகஸ்ட் 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது அவர், “காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
உயரதிகாரிகளின் வாகனங்களில் உள்ள கருப்பு ஸ்டிக்கர்களை (கூலிங் பிலிம்) அகற்ற வேண்டும். சொந்த வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்தக்கூடாது” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், “19 ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். அண்மையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டில், ஆர்டர்லி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்” என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நமது நாட்டில் குடிமக்கள் தான் உண்மையான ராஜா, ராணிகள். நாம் (அதிகாரிகள்) அனைவரும் மக்கள் சேவகர்கள். ஆங்கிலேயர்கள் காலத்து அடிமை சாசன முறையான ஆர்டர்லி முறை இன்று வரை தொடர்வது வெட்கக்கேடானது.
இந்த விசயத்தில் முதன்மைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தால் மட்டும் போதாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் போலீசார் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நன்மதிப்புடன் திகழ வேண்டும் என்று கூறினார்.
ஆர்டர்லிகளாக இருப்பவர்கள் இதுதொடர்பாக எதுவும் பேசமாட்டார்கள். துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடம் இருந்தோ, டி.ஜி.பி.யிடம் இருந்தோ வருவதில்லை. ஆர்டர்லிகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவை முறையாக பின்பற்றாத ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட நேரிடும். தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.
ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், ஆர்டர்லிகளை திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஆர்டர்லி வழக்கு இன்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தபோது, ஆர்டர்லி முறை ஒழிப்பில் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளதை பாராட்டுவதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை இறுதி உத்தரவு வரும் 23ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
துப்பாக்கி சுட பயிற்சி பெற்றவரை சப்பாத்தி சுட வைப்பதா?: ஐகோர்ட் கண்டனம்!