விஜயலட்சுமி புகாரை ரத்து செய்ய முடியாது: சீமான் வழக்கில் உத்தரவு!

Published On:

| By Kavi

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 17) தள்ளுபடி செய்தது. Vijayalakshmi complaint cannot be withdrawn

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

அதில், “கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இது ஐ.பி.சி 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட (பாலியல் வன்கொடுமை) வழக்கு என தெரிவித்தார்.

இதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அடுத்தமுறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து அன்றே உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி வழக்கு இன்று (பிப்ரவரி 17) விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், “2008ல் மதுரை கோயிலில் சீமானும், விஜயலட்சுமியும் மாலை மாற்றிக்கொண்டனர்.
பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் தொடர்பு வைத்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக சீமான் கூறியதால் முதலில் விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் சீமான் வழக்கை சந்திக்க வேண்டும். விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் 12 வாரத்தில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். Vijayalakshmi complaint cannot be withdrawn

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share