சிறப்புப் பத்தி: ஒராங்குட்டான் + நவகாலனியம் = பண்டிகைக் கால விளம்பரம்

அரசியல் சிறப்புக் கட்டுரை

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரமும் அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து மூன்று வாரங்களாகப் போகிறது. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தங்களது விளம்பரங்களை டிவியிலும் இப்போது யூ-ட்யுபிலும் வெளியிடுவதும் வழக்கமாகிவருகிறது. அவ்விளம்பரங்களை ஒரு கலாச்சாரப் பொருளாக ஊடகங்கள் அலசுவது ஒரு திரைப்பட விமரிசனம் போன்ற நிகழ்வாகும் (அமெரிக்காவிலோ அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்தே சூப்பர் மார்க்கெட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறப்பு விற்பனைக் “கோலாகலங்கள்” ஆரம்பமாகி விட்டதைப் பார்த்தேன்). இந்த ஆண்டு பிரிட்டனில் மட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கால விளம்பரங்களின் தயாரிப்பு, ஒலி/ளி பரப்புச் செலவுகள் நாலரை பில்லியன் பவுண்டுகள் (ஏறத்தாழ 40,500 கோடி ரூபாய்கள்) என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிடக் கொஞ்சம் குறைவான தொகையாகும்.

போன வருடம் பிரிட்டனின் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் (நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31 வரை) செலவு 79 பில்லியன் பவுண்டுகள் (ஏறத்தாழ ஏழு லட்சம் கோடி) எனச் சில்லறை வர்த்தகங்களுக்கான ஆய்வு நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. விளம்பரங்கள் இவ்வர்த்தகத்தில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இவ்விளம்பரங்களால் வாடிக்கையாளர்கள் உந்தப்படுகிறார்களா என்றால் அதற்கு யாரிடமும் சாட்சியமான பதில் இருப்பதில்லை. ஏனெனில் எல்லா விளம்பரங்களும் பண்டிகைக் கால நல்லெண்ணம், மகிழ்ச்சி, குடும்பம் மற்றும் உறவுகளிடம் அன்பு செலுத்துவது பற்றி மட்டுமே பேசுவது வழக்கம். ஆனால் இவ்விளம்பரங்கள் ஊடகப் பத்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு விவாதிக்கப்படுகின்றன. முக்கியத்துவமாக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் சரியானபடி இல்லையெனில் அந்நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் அதிர ஆரம்பிக்கின்றன.

நிறம் மாறும் விளம்பரங்கள்

கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் உள்ள கிறிஸ்துமஸ் விளம்பரங்களில் வெள்ளையரல்லாதோரின் முகங்கள் பிரதானமாக்கப்படுகின்றன. குறிப்பாகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களும் பிரிட்டனின் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் முகங்களாகச் சில வருடங்களாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மாதிரியான விளம்பரங்கள் பிரிட்டன், தனது காலனிய வரலாறு மற்றும் வெள்ளையினப் பெருமை பேசுவதை விட்டு தாராளவாதத்தை நோக்கிச் செல்வதின் அடையாளமே என உள்ளூர் தாராளவாதிகள் பேசிவருகின்றனர் (மேகன் மார்க்கிளின் திருமணத்தைப் புகழ்ந்தது போல). இக்கூற்றில் ஒரு வகையான உண்மை உள்ளதையும் மறுப்பதற்கில்லை. கறுப்பினத்தோர் ஊடகங்களில் சாதாரணக் குடியாகப் பிரதிநிதித்துவப்படுவது வரவேற்கத்தக்கதே.

Orangutan and neo-colonialism is festive advertising

2011 மக்கள் தொகை வாக்கெடுப்பில் வெள்ளையரல்லாதோர் என 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக அரசாங்கக் கணக்கு தெரிவிக்கிறது. எனவே அவர்களை ஒதுக்கிவிட முடியாது என்பது வியாபாரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. பிரிட்டனில் உள்ள கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், காலனியத்தின் பலனாக, கிறிஸ்துவர்கள். எனவே அவர்களைப் புறக்கணிப்பதினால் பயனில்லை. அரவணைத்தால் நட்டமில்லை. அதே சமயத்தில் வர்த்தகக் கொள்கைகளோ, விளம்பரங்களோ பிரிட்டனின் நலனுக்கோ அவற்றின் பிம்பத்துக்கோ இடையூறு வருமாயின் அதைத் தடை செய்யக் கருத்துச் சுதந்திரமுள்ள பிரிட்டன் தயங்காது.

நவம்பர் முதல் வாரத்தில், பிரிட்டனின் முன்னனி சூப்பர் மார்க்கெட் ஐஸ்லாண்ட் தனது கிறிஸ்துமஸ் விளம்பரத்தை வெளியிட முற்பட்டது. இந்த விளம்பரத்திற்கு ஓகே அளிக்க க்ளியர் காஸ்ட் என்ற சான்றிதழ் அளிக்கும் நிறுவனம் மறுத்துவிட்டது.

பிரிட்டனில் வர்த்தக விளம்பரங்களை வெளியிடும் முன் அனைத்து விளம்பரங்களையும் (பிரிட்டனின்) விளம்பர நெறிகளுக்கு உட்பட்டுள்ளதா என்று கவனித்து சான்றிதழ் வழங்கும் பொறுப்பு [க்ளியர் காஸ்ட்](https://www.clearcast.co.uk/about/) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அமைப்போ, சட்டரீதியான அமைப்போ அல்ல. ஆறு தொலைக்காட்சியினரால் (ஐடிவி, ஐடிவி ப்ரேக்ஃபாஸ்ட், சானெல் 4, சானெல் 5, ஸ்கை, சிஎனென் டர்னர்) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வியாபார நடை முறை (an approved clearance process). அவ்வளவே.

குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் விளம்பரம்

ஐஸ்லாண்டின் விளம்பரம், பிரிட்டனின் மற்ற பண்டிகை விளம்பர உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முக்கியமாக விளம்பரத்தின் மையக் கருத்து மகிழ்ச்சி பற்றியதல்ல. அழிந்துவரும் மழைக் காடுகளைப் பற்றியும், அதை மனிதர்கள் பனை எண்ணைகளுக்காக அழித்துவருவதையும், அதனால் தினசரி இறந்து வரும் 25 ஒராங்குட்டான் குரங்களைப் பற்றியும் அந்த விளம்பரம் கவலைப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட இந்த [அனிமேஷன் விளம்பரம்](https://www.youtube.com/watch?v=oA10-oZi4Xc) ஒரு சிறுமியின் படுக்கை அறையில் ஆரம்பமாகிறது. அவளது அறையில் ஒரு ஒராங்குட்டான் குரங்கு அனுமதியின்றி உள்ளே நுழைந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறது. ஏன் என்று அந்தச் சிறுமி கேட்கையில், நான் இருக்கிற காடுகளில், நீங்களெல்லாம் வந்து என்னைப் போன்றவர்களைத் துரத்துகிறீர்களே, அது மட்டும் என்ன என நியாயம் கேட்கிறது. சுற்றுப்புற சூழலுக்கும், கட்டுப்பாடற்ற பனை எண்ணை நுகர்வினால் ஏற்பட்டுள்ள குரங்குகளின் துயரத்திற்கும் மனிதர்களினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என அச்சிறுமி உறுதி எடுப்பதாக விளம்பரம் முடிகிறது. இந்த விளம்பரம் பண்டிகைக் கால நுகர்வின் மீது ஒரு விதமான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறது.

வெற்றுக் காரணங்கள்

க்ளியர் காஸ்ட் இந்த விளம்பரத்துக்கான சான்றிதழ் கொடுக்க முடியாததற்கு முன்னுக்குப் பின் முரணான காரணங்கள் சொன்னது. வர்த்தக விளம்பரங்களில் அரசியல் சாயம் கூடாது என்பது விசித்திரமான முதல் காரணம். வர்த்தகம் என்பதே அரசியல்; இன்றைய பன்னாட்டு அரசியல் உலகமயமாக்கல் எல்லாம் வர்த்தகத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்பதை இப்பத்திகளில் தொடர்ந்து பார்த்தோம். ஆனால் பிரிட்டனின் (கிறிஸ்துமஸ் பண்டிகை) விளம்பரங்களில் அரசியல் சாயம் அனுமதிக்க மாட்டோம் என்பது கபடமானது. இவ்விளக்கத்துக்கு தாராளவாதிகளிடம் இருந்தும், கன்சர்வேட்டிவ் அமைச்சரிடம் இருந்தும், ஊடக ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுக்க க்ளியர் காஸ்ட் மற்றொரு காரணத்தைச் சேர்த்துக்கொண்டது: இந்த விளம்பரம் க்ரீன் பீஸ் என்னும் தன்னார்வ அமைப்பின் மேற்பார்வையின்படி தயாரிக்கப்பட்டது. அந்த அமைப்பு வர்த்தக விளம்பரத்தில் தனது பிரச்சினையை (அஜெண்டா) மறைமுகமாக முன்னிறுத்துகிறது என்பதாகும்.

க்ரீன் பீஸ் இதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால் ஐஸ்லாண்ட் இதை ஒப்புக் கொண்டாலும், இந்த விளம்பரத்தில் க்ரீன் பீஸ் பெயரோ அவர்களின் பிரச்சார வாசகமோ, நெடியோ இல்லை என வாதிட்டது (முதலில் இருந்ததை பிறகு நீக்கி விட்டு பின் ஒளிபரப்ப அனுமதி கேட்டது. மறுக்கப்பட்டது). க்ரீன் பீஸ் இவ்விளம்பரத்தைத் தயாரித்துக் கொடுத்த ஒரு நிறுவனம் (content producers), அவ்வளவே என்பது ஐஸ்லாண்டின் வாதம். ஆனால் க்ளியர் காஸ்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் தலைவர் க்றிஸ் மண்டி, விளம்பரத்தின் அரசியல் தன்மையைச் சுட்டிக்காட்டிய பின், பிரிட்டனின் ஆறு தொலைக்காட்சிகளும்ஒளிபரப்ப மறுத்துவிட்டதாக அறிக்கை விடுத்தார்.

ஒருபுறம் ‘நடுநிலை’ தொலைக்காட்சிகள் வர்த்தகத்தால் சுற்றுப்புற அரசியல் பேசத் தயங்குகின்றன. ஆனால் இவ்விளம்பரத்தைத் தடை செய்தது தவறு என பிரிட்டனின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஆதரவு முழக்கமிடுகிறார். மறுபுறம் இந்த விளம்பரத்திற்கான ஆலோசனை தெரிவித்த க்ரீன் பீஸ் எந்த வித அறிக்கையும் விடாமல் மவுனமாக உள்ளது. இடது, வலது சாரி குழுக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்தை அனுமதிக்க வேண்டும் என இணைய-மனுக்களைச் சமர்ப்பித்தவாறு உள்ளனர். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் – யார், யார் பக்கம் உள்ளனர் என்பது குழப்பமாக இருக்கும். கவலை வேண்டாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கறுப்பினத்தவர்கள் பிரதிநிதித்துவப்படலாம். ஆனால் அத்தளம் இனத் துவேஷத்தைப் போக்காது. கருத்துச் சுதந்திரம் மிக்க பிரிட்டனில் பண்டிகைக் காலத்திலோ அல்லது மற்ற நேரங்களிலோ வர்த்தக விளம்பரங்களில் அரசியல் சாயம் கூடாது என தடை செய்யப்படலாம். அதை கண்டிக்கும் அமைச்சர் ஒரு அறிக்கையோடு (அல்லது ட்வீட்) முடித்துக்கொள்வார் (“நான் மற்ற நிறுவனங்களின் முடிவுகளில் தலையிட முடியாது”). இடது, வலது சாரிகள் கருத்து சுதந்திரம் பற்றி இணையங்களில் பேசலாம். ஆனால் அந்தப் பேச்சு மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் அடங்கிவிடும்.

ஐஸ்லாண்டின் வியூகம்?

ஒருவேளை இந்த விளம்பரத்தை க்ளியர் காஸ்ட் தடை செய்யக்கூடும் என்று தெரிந்தே ஐஸ்லாண்ட் வெளியிட்டதா என்ற கேள்வியும் எழத் தொடங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த விளம்பரத்தை யூ-ட்யூபில் கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதற்கு ஐஸ்லாண்ட் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு செய்தியின்படி, ஐஸ்லாண்ட் கிறிஸ்துமஸ் விளம்பரத்திற்காக அரை மில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒளிபரப்பு நேரத்தையே முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தத் தொகையானது பிரிட்டனின் தொலைக்காட்சி சந்தையில் ஒரு சில நாட்கள்கூடத் தாங்காது. அப்படியானால் இந்த விளம்பரம் தடை செய்யப்படும் என்று ஐஸ்லாண்ட் எதிர்பார்த்ததா? அதன் மூலம் திடீர் விளம்பரம் மூலம் செலவில்லாமல் மக்களைச் சென்றடைவதற்கான முயற்சியா இது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

Orangutan and neo-colonialism is festive advertising

இத்தடைக்குப் பின் ஐஸ்லாண்ட் சூப்பர் மார்க்கெட் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒராங்குட்டானின் உருவ அளவு (life size) கொண்ட அவற்றின் தோற்றம் போலவே உள்ள இயந்திர ரோபாட்டுகளை லண்டன் மற்றும் பிரிட்டனின் மற்ற பெருநகர தெருக்களில் ‘உலவ’ விடப் போவதாக ஐஸ்லாண்ட் [அறிவித்துள்ளது]( https://www.theguardian.com/business/2018/nov/14/iceland-let-loose-animatronic-orangutan-after-christmas-advert-ban-palm-oil#img-1). வரும் நாட்களில் இன்ஸ்டாகிராமில் ஹாஷ்டாக் ஒராங்குட்டான், ஹாஷ்டாக் ஃப்ரீ ஸ்பீச் என்ற வார்த்தைகளோடு மில்லன்னியல் குழந்தைகள் செல்ஃபி எடுப்பதை இப்போதே கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

இதன் மூலம் ஐஸ்லாண்ட்டின் பிரச்சாரமும், வர்த்தக விளம்பரமும் மக்களால் முன்னெடுத்து நடத்தப்படும். ஒராங்குட்டான் ரோபோட் செல்ஃபிகள் ட்ரெண்டிங் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள மழைக்காடுகளின் அழிவைத் தடுக்கப் புறப்பட்ட விளம்பரமானது, ஒராங்குட்டான் குரங்குக்கு ஆதரவான விழிப்புணர்வு விளம்பரமானது. இறுதியில் பின்நவீனக் கூறுகளின் ஒன்றான தான்தோன்றித்தனமான நுகர்வினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு மேற்கத்தியச் சந்தையின் விளையாட்டாகிவிடும். இந்த விளையாட்டுத்தனம் (gamification) நவகாலனியத்தின் பண்புகளை நம்மில் வலுவாக உரமிட வந்த உத்தியாகும். நிற்க.

நவகாலனியத்தின் உத்திகள்

காலனியம் என்பது வெள்ளை நிறத்தினரால் நிறுவப்பட்டாலும் நவகாலனியத்தின் பண்பானது முதலீட்டியம், லாபம் ஆகியவற்றைச் சுற்றியே வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் கறுப்பினத்தவர்கள் தேவை என்றால் அவர்களும் ஒரு சுற்றுக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிரிட்டனில் உள்ள மேல் சாதியினரிடம் முதலீட்டியம் இருக்குமானால், அச்சாதிய அடுக்குகளைப் போற்றவும் நவகாலனியம் தயங்காது. இதன் விளைவாகவே பிரிட்டனில் உள்ள கன்சர்வேட்டிவ் ஆட்சியாளர்கள் சாதிகளை ‘கலாச்சாரமாக’ அங்கீகரிப்பதில் தயக்கமின்றி உள்ளனர். அதே முதலீட்டிய அடிப்படையில்தான் பிரிட்டன் வேதாந்தாவை (அடிக்கிற மாதிரி) அணைத்துக்கொள்ளும். சவுதி அரேபியா என்ன கொடுமை செய்தாலும் எத்தனை கஷோக்கியைக் கொன்று வீசினாலும் நவ காலனிய பிரிட்டன் (அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ஸ்வீடன் – பட்டியல் நீளம்) கண்ணை மூடிக்கொள்ளும்.

அதே சமயத்தில் தன் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களை ஒதுக்கவும் நவகாலனியம் தயங்காது. சமீபத்தில் பிரிட்டன் வந்து சென்ற ஐ நா சபையின் பிணி மற்றும் மனித உரிமைக்கான சிறப்புப் பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் பிரிட்டனின் சமூக நிலை குறித்து ஒரு [அறிக்கை] (https://www.ohchr.org/en/issues/poverty/pages/srextremepovertyindex.aspx) அளித்துள்ளார். இந்த அறிக்கையில் பிரிட்டனில் 20 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள் எனவும், பிரிட்டன் ஏழை மக்களை முற்றிலுமாக புறந்தள்ளுவதின் மூலமாக அவர்களின் வாழ்வாதார மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை பிரிட்டனின் அரசியல் மட்டத்தில் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை ஒரு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாட்டைப் போல் ஆல்ஸ்டன் விமரிசித்துள்ளதாக பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ள வண்ணம் உள்ளனர்.

ஆனால், ஆல்ஸ்டன் அறிக்கை சொல்லும் செய்தி: நவ காலனியம் என்பது மனிதகுலத்தின் அடிப்படை மாண்புகளைச் சிதைக்கும் கொடும் திறன் படைத்தது.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Orangutan and neo-colonialism is festive advertising

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

முந்தைய கட்டுரைகளைப் படிக்க:

கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]

கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]

கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]

கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]

கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]

கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]

கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]

கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]

கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]

கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]

கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]

கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]

கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]

கட்டுரை 13: [இன்றைய உலகில் செம்பு]

கட்டுரை 14: [செம்புச் சுரண்டல்]

கட்டுரை 15: [சுரங்கக் குத்தகை]

கட்டுரை 16: [இயற்கை வளங்களின் உண்மையான விலை!]

கட்டுரை: 17: [தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!]

கட்டுரை: 18: [காபிக் கொட்டையும் சுரங்க அரசியலும்!]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0