சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… அரசின் நடவடிக்கைகள் என்ன?: உதயநிதி விளக்கம்!

Published On:

| By christopher

Orange alert for Chennai... What are the actions of the government?: Udhayanidhi explanation!

தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அதனால் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 13) நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மையத்திற்கு தொடர்புகொண்ட பொது மக்களின் அழைப்பையும் ஏற்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அதனை நிறைவேற்ற அங்கிருந்த அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

Image

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி அளித்த பேட்டியில், “வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அதீத கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 செ.மீ. அதிகமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதற்காக பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது.

அதன்படி, மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது.

சமூக வலைத்தள பக்கங்கள், வாட்ஸ்அப், நம்ம சென்னை தளம் ஆகியவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக கிட்டத்தட்ட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக 100 ஹெச்பி சக்தி கொண்ட 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன.

அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்வார்கள்.

சென்னையில் மழைக்கால நிவாரண பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சார்பாக TamilNadu Alert என்ற செயலியை டவுண்லோட் மூலம் மழை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம்.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறாமல் இருந்தால் அதைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். மழைநீர் வடிகால் ஏதேனும் மூடாமல் இருந்தால் பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

தரையின் மேல் உள்ள அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மின்சார வாரியத்திற்கு வழங்கி இருக்கிறோம். தாழ்வான மின் மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மின்வாரிய ஊழியர்கள், மெட்ரோ நிறுவனம் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசும், அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், மாநகராட்சி பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் முறைகேடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

பிக் பாஸ் சீசன் 8 : வெளியேறுகிறாரா ரவீந்தர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share