கட்சிக்குள் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5ஆவது நாளாக இன்று(ஜனவரி 11) நடந்தது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் அ.தி.மு.க கட்சி சார்பாக மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை வைத்தார்.
அவர் தனது வாதத்தில், “நிர்வாக ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்துவதாகவே இந்த வழக்குகள் இருக்கிறது.
ஜனநாயக அடிப்படையில், பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை, கட்சியை செயல்படாமல் தடுப்பதை ஏற்கமுடியாது.
பொதுக்குழு அனைத்து உரிய நடைமுறைப்படி தான் நடைபெற்றது. எனவே தான் அதனை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் தற்போது பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது.
ஜூலை 11அன்று நடந்த பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவரால் அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். குற்றச்சாட்டின்படி பார்த்தால் கூட, அவைத்தலைவரை நியமித்தது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் சேர்ந்து தான்.
பொதுக்குழு உறுப்பினர்கள் எவரும் கூட்டம் தொடர்பாக தங்களுக்கு உரிய அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என புகார் கூறவில்லை.
ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தான் அடுத்த பொதுக்குழு ஜூலை11 நடைபெறும் என்ற அறிவிப்பை அவைத்தலைவர் வெளியிட்டார், அப்போது அனைவரும் அங்கு இருந்தனர்.
கட்சியின் மீது ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிருப்தி இருந்தால், அதற்கு முறையிட வேண்டிய இடம் தேர்தல் ஆணையம்தான்.
கட்சிக்குள் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை” என்றார்.
வாதத்தின்போது, பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சிநிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரி்லே அவர் நீக்கப்பட்டார் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கலை.ரா
முதல்வரின் தீர்மானம், அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் காப்பாற்றிவிட்டது: சபாநாயகர் அப்பாவு
“பெரிய பதவிக்கு அடிபோடுகிறார் சபாநாயகர்”: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!