“பல வழக்குகளை எதிர்கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம்தான் சிறைக்கு செல்வார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று (டிசம்பர் 26) அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மறுபக்கம் கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். அப்போது நான் கையெழுத்து போட்டதால் கோப்புகள் அடுத்தடுத்து நகரும். அந்த ரகசியங்களை எல்லாம் வெளியில் சொன்னால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குதான் செல்வார்” என்று கூறியிருந்தார்.
இன்று (டிசம்பர் 27)கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”திமுகவின் பி டீம் ஓபிஎஸ். இவர் அம்மாவுக்கு 2 கோடி கடன் கொடுத்தாராம். இது என்ன அநியாயம். வெட்ககேடான விஷயம். இவர்தான் ஜெயலலிதாவுக்கு விசுவாசியா. நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கட்சியில் இருக்கிறோம். ஓபிஎஸ் இடையில் வந்தவர்.
நான் 1989, 1991ல் எம்.எல்.ஏவாக இருந்தேன். 1998ல் எம்.பியாக இருந்தேன். 2001ல் தான் ஓபிஎஸ் எம்.எல்.ஏ-வாக ஆனார். அதுவரை எந்த பதவியும் கிடையாது. சேர்மேனாக மட்டும் தான் இருந்தார். அதிகமாக போட்டியிட்டது நான் தான்.
போடிநாயக்கனூரில் 1989ல் ஜெயலலிதா போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிட்டார். அவருக்கு சீஃப் ஏஜெண்டாக இருந்தவர் ஓபிஎஸ். ஆனால் 1985லேயே அம்மாவுக்காக சேலத்தில் பேரவை ஆரம்பித்தோம். அன்று முதல் இன்று வரை அம்மாவுக்கு விசுவாசியாக இருக்கிறோம். அதனால் தான் 89ல் சீட் கொடுத்து என்னை வெற்றி பெற செய்தார்” என்றார்.
சில ரகசியங்களை சொன்னால் நீங்கள் சிறை செல்வீர்கள் என்று ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அவரை சொல்ல சொல்லுங்கள். நான் பகிரங்கமாக சொல்கிறேன். அப்படி இருந்தால் திமுககாரர்கள் விடுவார்களா. இவர் சிறைக்கு போவது உறுதியாகிவிட்டது. அதனால் தான் மற்றவர்கள் மீது குறை கூறி கொண்டு இருக்கிறார். என்ன ரகசியம் என்று சொல்லுங்கள். மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.
பல வழக்குகளை ஓபிஎஸ் சந்தித்துக்கொண்டிருக்கிறார். இதனால் அவர் உள்ளே போவது நிச்சயம். ஓபிஎஸ் இல்லை. யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது” என கூறினார்.
பாஜகவும் அதிமுகவும் தொடர்பில் தான் இருக்கின்றன என ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அவருக்காகவா அதிமுகவை நடத்துகிறோம். இவர்களுக்கு அதிமுகவை குறைசொல்வதே வேலை. ஏனென்றால் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று தெரிவித்தது முதல் திமுகவினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சினை. நீங்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, எதாவது சொன்னோமா. எமெர்ஜென்சியின் போது எங்களையெல்லாம் கைது செய்தார்கள் என்று சிறையில் இருப்பது போல கண்காட்சி வைத்து காட்டினார்கள். அப்படிப்பட்ட கட்சியோடுதானே கூட்டணி வைத்துள்ளீர்கள். 1999ல் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்தீர்கள். பாஜக அமைச்சரவையில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தார்களா இல்லையா. அப்போதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா.
கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். அந்த வகையில் முதலில் கூட்டணி வைத்தோம், இப்போது கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’ரூ.40,000 கோடி கொரோனா ஊழல்’ : பட்டியலிட்டு எடியூரப்பாவை அம்பலப்படுத்திய பாஜக எம்எல்ஏ!
எண்ணூர் அமோனியா கசிவு: தமிழக அரசை எச்சரித்த எடப்பாடி