ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை நேற்று (அக்டோபர் 18) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பொதுவெளியிலும் வெளியானது.
அந்த அறிக்கையில், ஓ பன்னீர்செல்வம் பற்றி சில வரையறைகளை செய்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.
விசாரணை அறிக்கையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் பதவியேற்ற பன்னீர்செல்வம் அதன்பின் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தர்ம யுத்தம் நடத்தியது அரசியல் ஆதாயத்திற்காகவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணை ஆணையம் அறிக்கை தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மற்றும் கொடநாடு வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை ஆகியவற்றை பற்றி பேசினர்.
ஜேசிடி பிரபாகர் பேசுகையில், “எங்களை பொறுத்தவரை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், அதிமுகவில் நிர்வாக பொறுப்புகளில் இருக்கிறவர்களும் விசாரணை ஆணையம் கொடுத்திருக்கிற அந்த அறிக்கை அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து எங்களது முடிவுகளையும், விளக்கத்தையும் நாங்கள் அளிப்போம்” என்றார்.
ஓபிஎஸ் வாக்குமூலம் முழுமையாக வெளிவரவில்லை!
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாதது தொடர்பான கேள்விக்கு, “அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் என்கின்ற முறையில் விசாரணை ஆணையம் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்பட்டதாக நாங்கள் கருதவில்லை. குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் எடுத்து நீதியரசர் அழகாக வெளியிட்டு இருக்கிறார்.
அவர் சொன்ன முக்கியமான விளக்கங்களில் ஒன்றை நான் இப்போது தெரிவிப்பது பொருத்தமானது என்று கருதுகிறேன்.
ஜெயலலிதா வெளிநாடு செல்ல வேண்டும்!
வெளிநாட்டிற்கு புரட்சி தலைவரை அழைத்துச் சென்றது போல, அண்ணாவை அழைத்துச் சென்று குணமாக்கியது போல, ஜெயலலிதாவின் உடல் நிலையை கருதி உடனடியாக அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் சிகிச்சை அளிக்க கூடாது? என்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரிடமும், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடமும் நேரடியாக விவாதித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து, முறையாக அந்த ஏற்பாட்டை செய்வதற்கு ஆவண செய்யுங்கள் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார்.
அதற்கு இருவரும், ”இரவு நாங்கள் மற்றவர்களை சந்தித்து விட்டு சொல்கிறோம் என்று சொன்னார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் குணமாகி விடுவார்!
அதற்கு அடுத்த நாள் காலை மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் ஓபிஎஸ்-ஐ பார்த்து, ’நீங்கள் நேற்று இரவு, வேலுமணியிடமும் விஜயபாஸ்கரிடமும் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ, எங்கு சிகிச்சை அளித்தால் முழுமையான உடல்நலம் பெறும் என்று கருதுகிறீர்களோ அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறீர்கள்.
அப்பல்லோ மருத்துவமனையிலும் நாங்கள் முறையான சிகிச்சை தான் அளித்து கொண்டிருக்கிறோம். உடல் நலம் தேறி வருகிறார், இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாகவே முற்றிலுமாக உடல்நலம் தேறி வரக்கூடிய சூழலில் தான் இருக்கிறார்.
எனவே இப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொன்னதையும் ஆணையத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பல்வேறு நிலைகளில் ஓபிஎஸ்-ம் அதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை!
ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை, அவருடைய மனக்கவலை எல்லாம் ஜெயலலிதா இன்னும் சிறப்பான முறையில் சிகிச்சை பெறுவதன் மூலமாக உயிர் பெற்று வர வேண்டும் என்பதிலும், குணமடைய வேண்டும் என்பதிலும் அக்கறையாக இருந்தார் என்பதை அந்த ஸ்டேட்மெண்ட் நிச்சயமாக விளக்கி இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
மருத்துவமனையில் நடந்தது பற்றி ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை. மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து முதல் நாள் என்ன சொன்னாரோ அதையே தான் இன்றுவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அம்மா மறைந்து விட்டார் என்ற மனக்கவலை இன்று வரை அவரது உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கிறது” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய வைத்தியலிங்கம், ”ஜெயலலிதா இறந்த தேதி குறித்து விசாரித்தால் தான் அதுபற்றி தெரியவரும். விசாரணைக்கு பிறகு எங்களுடைய கருத்தை தெரிவிக்கிறோம்” என்றார்.
திமுக யாருக்கு பாதுகாப்பு அளிக்கிறது?
இறுதியாக பேசிய மனோஜ் பாண்டியன், ”பன்னீர்செல்வம் அதிமுகவை உடைப்பதற்காக முதல்வரை சந்தித்தார் என்று கூறுவது பொய்யானது. டெண்டர் வழக்கு வரவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? கொடநாடு வழக்கில் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அது எதனால்? அதேபோன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். எனவே திமுக யாருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதை உங்களுடைய யூகத்துக்கு விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.
பிரியா
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு ரத்து!
காங்கிரஸில் அனைவரும் சமமானவர்கள் : கார்கே