சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ” அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலைதான் நீடிக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் பொதுக் குழுவை கூட்டத்தை நடத்த வேண்டும்.
பொதுக்குழுவைக் கூட்ட பிரச்சினை ஏற்பட்டால் சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக தொண்டர்கள் உற்சாக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
க.சீனிவாசன்
“இரு தரப்பெல்லாம் இல்லை… இனி ஒரே தரப்பு தான்!” ஓபிஎஸ் பேட்டி!