அதிமுகவில் நேற்று (ஜூலை 11) பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கித் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில். இதுகுறித்து இன்று (ஜூலை 12) பன்னீரின் ஆதரவாளரான வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“எம்.ஜிஆர். ஆரம்பித்த இந்த இயக்கத்தின் சட்டவிதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்களுடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள். அதை, இந்தப் பொதுக்குழுவால் நீக்க முடியாது. நேற்று (ஜூலை 11) பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓபிஎஸ்தான். ஆகவே, பொதுக்குழு மூலம் அவர்கள் அனுப்பிய கடிதம் எதுவும் எங்களுக்குச் செல்லாது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறோம்” என்றார் வைத்திலிங்கம்.
தனக்குக் கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் ஓபிஎஸ் என்று எடப்பாடி பொதுக்குழுவில் பேசியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம்,
“நிரந்தரப் பொதுச் செயலாளர் என்பது அம்மாதான் என்று பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அம்மாவுக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. எப்படி, தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தாரோ, அதேபோலத்தான் நான்கரை ஆண்டுகள் அவருடன் ஆட்சி புரிய உதவியாக இருந்த ஓபிஎஸ்ஸுக்கும் துரோகம் செய்கிறார்.
ராயப்பேட்டை கட்சி அலுவலகத்துக்கு நாங்கள் செல்லும்போது அந்த இந்தியன் பேங்க் அருகே செல்லும்போது எங்கள் மீது எடப்பாடி தரப்பு சோடா பாட்டில், கற்களை வீசினார்கள். அங்கே 5 நாட்களாக ரவுடிகளை நிறுத்தி வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்தது பழனிசாமி தரப்புதான். இதனால், எங்களைக் குறைசொல்வதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம்.
–ஜெ.பிரகாஷ்