வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் மதுரை மாநாடு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாட்டை கூட்டி இருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இந்த மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் பேர் வரை திரட்டி தனது பலத்தை… மாநிலத்தை ஆளும் திமுகவுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் ஒரு சேர காட்ட வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம்.
அதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இதற்காகவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி மதுரை மாநாடு வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் என்னென்ன பங்காற்ற வேண்டும் என்பதை பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
இதற்கிடையே மதுரை மாநாட்டில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்து சமுதாயத்தினரை பெருமளவு திரட்டும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.
இதே நேரம் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து மதுரை மாநாட்டுக்கு தென் மாவட்டத்திலிருந்து போதிய கூட்டம் திரண்டு விடக்கூடாது, அதிலும் குறிப்பாக முக்குலத்து சமுதாய மக்கள் அதிமுக மாநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஏற்கனவே தென் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் முக்குலத்து அமைப்புகள் சாதி உணர்வை ஊட்டி எடப்பாடிக்கு எதிரான நமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அதிமுகவின் மதுரை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று ரகசிய பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திருச்சியில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்திருக்கிறார் டிடிவி தினகரன். அது மட்டும் அல்ல மதுரை மாநாடு நடக்கும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி திருமணத்துக்காக சிவகங்கை செல்கிறார் டிடிவி தினகரன். திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் மதுரை மாநாட்டுக்கு செல்லும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களை சிவகங்கை திருமணத்திற்கு கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் ஓபிஎஸும் தென் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இவ்வாறு ஓபிஎஸ் டிடிவி ஆகிய இருவரும் சேர்ந்து எடப்பாடி மதுரை மாநாட்டுக்கு தென் மாவட்ட கூட்டம் திரண்டு விடக்கூடாது என்பதில் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள்.
இது குறித்து எடப்பாடி தகவல் அறிந்து கொண்டு தென் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தானே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஓபிஎஸ் – டிடிவி மாஸ்டர் பிளானை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று அதிமுக தரப்பில் கேட்டபோது….
‘ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்கள் பலர் வேலுமணி உள்ளிட்டவர்களை சந்தித்து சால்வை போட்டு சென்றிருக்கிறார்கள். அதையெல்லாம் ரகசியங்களாக தான் இப்போது வரை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் புகைப்படங்களையும் வெளியிட்டு அந்த கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவோம். எடப்பாடி பாஸிட்டிவ் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் – டிடிவி நெகட்டிவ் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அது எடுபடாது. மதுரை மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்கிறார்கள்.
அதே நேரம் ஆளும் திமுகவும் மதுரை மாநாட்டுக்கு எவ்வளவு நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடிகளை கொடுக்க அரசு எந்திரம் மூலம் தயாராகி வருகிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.