அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்ட நிலையிலும்… அதிமுக எங்களுடையது என்று கூறி பன்னீர்செல்வம் திருச்சியில் நாளை ஏப்ரல் 24 மாநாடு நடத்துகிறார்.
மாநாட்டின் முகப்பாக அதிமுக தலைமை கழக கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த மாநாட்டில் அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் நாளை நடைபெற உள்ள மாநாட்டுக்காக ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடிகளையும் இரட்டை இலை சின்னத்தையும் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இன்று (ஏப்ரல் 23) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பு கொடுத்துவிட்ட பிறகும் அவர் (ஓபிஎஸ்) கொடுக்கும் விளம்பரத்தில் அதிமுக கொடி ஒரு பக்கம் இரட்டை இலை ஒரு பக்கம் போட்டு மாநாடு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதுவே திமுகவாக இருந்தால் இதுபோல போடுவீர்களா?”என்று கேட்டார்.
அதிமுகவிடமிருந்து இப்படி எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பன்னீர் தரப்பினர் மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்கள். இன்று காலை பண்ருட்டி ராமச்சந்திரன் திருச்சி வந்து மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டார். ஓபிஎஸ் மூன்று எம்.ஜி.ஆர்களுக்கு சமம் என்று ஒரே போடாக போட்டார் பண்ருட்டி.
மாநாடு நடைபெற இருக்கும் ஜி கார்னர் மைதானத்தில் 25 ஆயிரம் நாற்காலிகள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர் டி ராமச்சந்திரன், திருச்சி கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தை திரட்டுவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகி இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த மாநாட்டுக்கு திருச்சி அதை சுற்றியுள்ள பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டும் தொண்டர்கள் வந்தால் போதும் என்றும் பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தென் மாவட்ட நிர்வாகிகள், ’நாங்களும் வேன்களில் ஆட்களை திரட்டி கொண்டு வருவோம்’ என்று வைத்திலிங்கத்திடம் உரிமையோடு போராடி அதற்கான அனுமதியை வாங்கி விட்டார்கள். மதுரை பகுதியில் இருந்தும் பல்வேறு வேன்கள் திருச்சிக்கு படையெடுக்கின்றன.
பொதுவாகவே எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாட்டுக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பல்வேறு தொந்தரவுகள் மறைமுகமாக கொடுக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் ஓபிஎஸ் நடத்தும் இந்த மாநாட்டுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து பெரிய அளவில் நெருக்கடிகள் ஏதும் இல்லை என்பதே கள நிலவரம்.
“பள்ளிக்கூட-கல்லூரிப் பேருந்துகள் போன்றவை மூலம் மாநாட்டுக்கு ஆட்களை திரட்டும் போது ஆர்டிஓக்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு. ஆனால் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாட்டுக்கு ஆர்டிஓக்கள் தரப்பிலிருந்து எந்த நெருக்கடியும் இல்லை.
மேலும் திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர்களே மாநாட்டு ஏற்பாடுகளுக்கு உதவுகிறார்கள். ஓபிஎஸ் ஒருவேளை இந்த மாநாட்டின் மூலமாக ஓரளவு பலம் பெற்றால் கூட அது அதிமுகவுக்குள் மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். அதுதான் திமுகவுக்கு நல்லது. அதனால் அரசு ரீதியாகவும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி திமுகவின் உதவி இந்த மாநாட்டுக்கு இருக்கிறது” என்கிறார்கள் திருச்சி அரசியல் வட்டாரத்தில்.
வேந்தன், வணங்காமுடி
பிடிஆர் ஆடியோ: ஆளுநரிடம் பாஜக கோரிக்கை என்ன?
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- ஆளுநர்- அமலாக்கத்துறை: ஆடியோ புயல்… பிடிஆரின் அடுத்த ஆக்ஷன் என்ன?