அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று உரிமை கொண்டாடிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம் வரும் ஜூலை 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடக்கும் என்று பன்னீர் அதிமுக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அணியில் பல்வேறு நிலைகளிலும் நிர்வாகிகளை தொடர்ந்து நியமித்து வரும் ஓபிஎஸ், அண்மையில் டி. டி. வி தினகரனோடு தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்லத் திருமணத்தில் பங்கேற்ற பிறகு புதிய நம்பிக்கையோடு இருக்கிறார் என்கிறார்கள் அவரைச் சுற்றியுள்ளவர்கள்.
“எடப்பாடி பழனிசாமியின் முகாமிலேயே ஒருங்கிணைந்த அ. தி. மு. க என்ற குரலும், கோரிக்கையும் எழ ஆரம்பித்துவிட்டது.
எம்பி தேர்தலில் ஓ பி எஸ்- டி டி வி இணைந்து அதிமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினால் திமுக அரசின் மீது இருக்கும் அதிருப்தியை அதிமுகவால் வெற்றியாக அறுவடை செய்ய முடியாது.
அதனால் இப்போதே எல்லாரையும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குரல் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடமே எழுந்துவிட்டது. இதையறிந்துதான் ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மேலும் அதிமுகவில் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை, ஜெயா டிவி இருந்தது. பிறகு நமது அம்மா பத்திரிகை, நியூஸ் ஜெ டிவி உருவானது. ஆனால் இப்போது இவை இர்ண்டிலும் ஓபிஎஸ் தரப்பு செய்திகள் வருவதில்லை.
எனவே நம் தரப்பு அறிவிப்புகள், செய்திகள், அறிக்கைகளுக்காக புதிய செய்தி ஊடகம் வேண்டும் ஓபிஎஸ் சிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதிமுக ஒன்றுபடும் வரையில் தனது தரப்புக்கு என அதிகாரபூர்வ செய்தித் தாள், டிவி வேண்டும் என்ற ஆலோசனையையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ்.
அதன் விளைவாக விரைவில் ’தொண்டன்’ என்ற பெயரில் செய்தித் தாள் மற்றும் டிவியை கொண்டுவர ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார்.
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கு மாறாக சட்ட விதிகளைத் திருத்தியதோடு… சில கோடீஸ்வர நிர்வாகிகள் துணையோடு எடப்பாடி செயல்பட்டு வருகிறார் என்பதுதான் பன்னீரின் தொடர் குற்றச்சாட்டு.
அதனால்தான் தன் தரப்பு செய்திகளை வெளியிட, தொண்டன் என்ற பெயரில் செய்தித் தாள் துவக்க இருக்கிறார்.
’தொண்டன்’ செய்தித் தாளின் ஆசிரியராக ஏற்கனவே நமது எம்.ஜிஆர், நமது அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர், பதிப்பாளராக பொறுப்பு வகித்த மருது அழகுராஜ் செயல்டுவார்” என்கிறார்கள் ஓபிஎஸ் வட்டாரங்களில்.
தொண்டன் வெளிவந்துவிட்டால்…அதிமுகவுக்கு மூன்று டிவிகள், மூன்று செய்தித் தாள்கள். அப்பப்பா…
–வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: டாஸ்மாக்கில் கேரளா மாடல்? அமைச்சர் நடத்திய அவசர ஆலோசனை!
“கமல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம்” : ‘புராஜெக்ட் கே இயக்குநர்!